மேலும் செய்திகள்
ஜூனியர் உலக ஹாக்கி: கேப்டன் ரோகித்
14-Nov-2025
சென்னை: ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் இன்று சென்னை, மதுரையில் துவங்குகிறது. சொந்தமண்ணில் களமிறங்கும் இந்திய அணியினர், சிறப்பாக செயல்பட்டு, 9 ஆண்டுக்குப் பின் கோப்பை வெல்ல காத்திருக்கின்றனர்.சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஜூனியர் அணிகளுக்கான உலக கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. இதன் 14வது சீசன் இன்று சென்னை, மதுரையில் துவங்குகிறது. 'நடப்பு சாம்பியன்' ஜெர்மனி (உலகின் 'நம்பர்-1'), 'நம்பர்-2' இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 24 அணிகள், 6 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. இந்திய அணி, 'பி' பிரிவில் சிலி, ஓமன், சுவிட்சர்லாந்து அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இன்று தனது முதல் போட்டியில், தரவரிசையில் 18 வது இடத்திலுள்ள சிலியை (சென்னை) எதிர்கொள்கிறது. இந்திய அணிக்கு கேப்டன் ரோகித், அன்மோல் எக்கா, ஷர்தானந்த், கோல் கீப்பர்கள் பிக்ரம்ஜித் சிங், பிரின்ஸ்தீப் சிங் கைகொடுக்கலாம்.அனுபவ அராய்ஜீத் சிங், தோள்பட்டை காயத்தால் விலகியது பின்னடைவு. தவிர 'பெனால்டி கார்னர்' வாய்ப்புகளை கோலாக மாற்றுவதிலும் தடுமாறுகின்றனர். சமீபத்திய தொடரில் கிடைத்த 53 வாய்ப்பில், 8ல் மட்டும் கோல் அடித்தனர். இதில் முன்னேற்றம் அடைய வேண்டும்.கடந்த 2023 உலக தொடரில் இந்திய அணி, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் 1-3 என ஸ்பெயினிடம் தோற்று, நான்காவது இடம் பெற்றது. இம்முறை சாதித்தால், 9 ஆண்டுக்குப் பின் (கடைசியாக 2016) இந்தியா மீண்டும் உலக சாம்பியன் ஆகலாம். ஜெர்மனி சவால்ஜூனியர் அரங்கில் 7 முறை கோப்பை வென்ற ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பெல்ஜியம் அணிகள் சாதிக்க முயற்சிக்கலாம். 24 அணிகள்ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை தொடரில் முதன் முறையாக தற்போது 24 அணிகள் பங்கேற்கின்றன. முன்னதாக 2009ல் மலேசிய தொடரில் 20 அணிகள் மோதின. 82 போட்டி நடந்தன. 72 போட்டி* உலக கோப்பை ஹாக்கி தொடர் முதன் முறையாக இந்தியாவில் சென்னை, மதுரை என இரு மைதானங்களில் நடக்கின்றன. * சென்னையில் 41, மதுரையில் 31 என மொத்தம் 72 போட்டி நடக்க உள்ளன. ஸ்ரீஜேஷ் நம்பிக்கைஇந்திய அணி பயிற்சியாளரும் ஒலிம்பிக் சாம்பியனுமான முன்னாள் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் கூறுகையில், '' இந்திய ஹாக்கியின் பாரம்பரியத்துக்கு ஏற்ப, வேகமாக, துணிச்சலாக செயல்படுவோம். இந்த வாய்ப்பை பெறுவதற்காக, வீரர்கள் கடுமையாக போராடி வந்துள்ளனர். உலக அரங்கில் தேசத்தை பெருமைப்படுத்துவர்,'' என்றார்.ஜெர்மனி-தென் ஆப்ரிக்கா மோதல்மதுரையில் இன்று காலை 9:00 மணிக்கு, முதல் லீக் போட்டி துவங்குகிறது. 'ஏ' பிரிவில் இடம் பெற்ற ஜெர்மனி, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. ஹாக்கி இந்தியா பொதுச்செயலாளர் போலோநாத் சிங், போட்டியை துவக்கி வைக்கிறார். அடையாள அட்டை குளறுபடிமதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மீடியாவுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 5வது நுழைவாயிலில் செய்தியாளர்கள், கேமராமேன்கள் செல்வதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை பெற்றவர்கள் மட்டும் இதில் அனுமதிக்கப்படுவர். அடையாள அட்டை பெற, 'செய்தியாளர்கள் மதுரை மாவட்ட நிர்வாகம் மூலம் தங்களது நிறுவன அடையாள அட்டை, ஆதார் நகல், போட்டோவை அனுப்ப வேண்டும்,' என முதலில் தெரிவிக்கப்பட்டது. அனைவரும் விண்ணப்பித்த நிலையில், அடுத்ததாக ஹாக்கி இந்தியா சார்பிலும், அவுட்சோர்ஸிங் முறையிலும் இரண்டு முறை தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. மூன்று இடங்களில் விண்ணப்பித்தவர்களுக்கு நேற்று வரை ஹாக்கி போட்டி செய்தி சேகரிப்புக்கான தனி அடையாள அட்டை வழங்கப்படவில்லை. அனைத்து செய்தியாளர்களின் அலைபேசி எண்கள் இருப்பதால் ஹாக்கி இந்தியா அல்லது 'அவுட்சோர்ஸிங்' அதிகாரிகள் அடையாள அட்டையை எங்கு வாங்குவது என்று தெரிவித்திருக்க வேண்டும். நேற்று மாலை வரை யாரிடம் சென்று வாங்குவது என்றும் தெரிவிக்கவும் இல்லை. ஹாக்கி இந்தியா சார்பில் பல்வேறு நபர்களை தொடர்பு கொண்ட பிறகு, ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் அடையாள அட்டை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் மூலமோ அல்லது தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமோ ஏற்பாடு செய்திருந்தால் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்காது. புதிய மேற்கூரைஜூனியர் ஹாக்கி உலக தொடருக்காக, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் புதிய செயற்கை டர்ப், ரசிகர்கள் அமர்வதற்கு புதிய மேற்கூரை, இரவு நேரப் போட்டிகளுக்காக நவீன விளக்குகள், வீரர்களுக்கான அறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
14-Nov-2025