ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி மைதானம் திறப்பு * மதுரையில் பெல்ஜியம் அணி
மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நவ. 28ல் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் துவங்க உள்ள ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று பெல்ஜியம் அணியினர் மதுரை வந்தனர். மதுரைக்கு துணை முதல்வர் உதயநிதி வந்த விமானத்திலேயே பெல்ஜியம் அணியினர் நேற்று மாலை வந்தனர். கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்கப்பட்டு பசுமலை தாஜ் கேட்வே ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.நவ.30ல் சுவிட்சர்லாந்து, இந்திய அணிகள் வரவுள்ளன. இன்று முதல் வெளிநாட்டு அணிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் புதிய சர்வதேச ஹாக்கி அரங்கில் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். * நவ. 28 காலை 9:00 மணிக்கு துவங்கும் முதல் போட்டியில் 'ஏ' பிரிவில் ஜெர்மனி, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து பல்வேறு அணிகள் பங்கேற்கும் போட்டிகள் நடக்க உள்ளன. டிச. 2 இரவு 8:00 மணிக்கு மின்னொளியில் நடக்கும் போட்டியில் இந்தியா, சுவிட்சர்லாந்து மோதுகின்றன. 'டிஜிட்டல்' அனுமதிமதுரையில் முதன்முறையாக ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி நடக்க உள்ளதால் இளம் ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் வரலாம். இதனால் 'டிஜிட்டல்' முறையில் அனுமதி வழங்க ஆணையம் திட்டமிட்டுள்ளது. நிரந்தர கேலரியில் வி.ஐ.பி.,க்கள், பார்வையாளர்கள் 350 பேர் அமரும் வசதியுள்ளது. ஹாக்கி அரங்கின் இருபுறமும் 1200 பேர் அமரும் வகையில் தற்காலிக கேலரி அமைக்கப்பட்டுள்ளது. 'டிஜிட்டல்' அனுமதிக்கான விபரங்கள் அடங்கிய கியூ,ஆர். கோடு இன்று (நவ.23) வெளியிடப்படும். இதை பயன்படுத்தி இலவச அனுமதி டிக்கெட் பெறலாம். மைதானம் திறப்புமதுரை ரேஸ்கோர்ஸ் மைதான வளாகத்தில் சர்வதேச ஹாக்கி விளையாட்டு மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி நேற்று மாலை திறந்து வைத்தார். விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடினார். ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் மைதானத்திற்கு சர்வதேச தரச் சான்று வழங்கப்பட்டது. அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், தளபதி எம்.எல்.ஏ., இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, கலெக்டர் பிரவீன்குமார் பங்கேற்றனர். மின்னொளியில் ஜொலித்த மைதானத்தில் கண்கவர் வாணவேடிக்கை நடந்தது.