பாராலிம்பிக்கில் ஜொலிக்கும் இந்தியா: பாரிசில் கலக்கல் நிறைவு விழா
பாரிஸ்: பாராலிம்பிக் விளையாட்டில் புதிய சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. 7 தங்கம் உட்பட 29 பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பாராலிம்பிக் போட்டி கடந்த ஆக. 28ல் துவங்கியது. நேற்று நிறைவு பெற்றது. இதில் 168 நாடுகளை சேர்ந்த 4,400 மாற்றுத்திறனாளி நட்சத்திரங்கள் மனஉறுதியுடன் சாதித்தனர்.5 போட்டியில் அசத்தல்இந்தியா சார்பில் 84 பேர், 12 வகையான போட்டிகளில் பங்கேற்றனர். வாழ்வில் ஏற்பட்ட சோகங்களை கடந்து உச்சம் தொட்டனர். தடகளம், பாட்மின்டன், துப்பாக்கி சுடுதல், வில்வித்தை, ஜூடோ என 5 போட்டிகளில் அசத்திய நமது நட்சத்திரங்கள் மொத்தம் 29 பதக்கங்கள் பெற்று தந்தனர். தடகளத்தில் மட்டும் 17 பதக்கம் கிடைத்தது கூடுதல் சிறப்பு. நல்ல முன்னேற்றம்சமீபத்திய பாரிஸ் ஒலிம்பிக்கில் 6 பதக்கம் மட்டும் வென்ற இந்தியா, 71வது பிடித்தது. ஆனால், பாரிஸ் பாராலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியா 18வது இடம் பிடித்து, அசத்தியுள்ளது. 'டாப்-20' பட்டியலில் இடம் பெற்றதன் மூலம் புதிய பாராலிம்பிக் வல்லரசாக அடையாளம் காட்டியுள்ளது. ரியோ பாராலிம்பிக்கில் (2016) 4 பதக்கம், டோக்கியோவில் (2021) 19 பதக்கம் தான் வென்றது. தற்போது நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. பல போட்டிகளில் நமது வீரர், வீராங்கனைகள் புதிய சாதனை படைத்தனர்.மாரியப்பன் அருமைதடகளத்தில் பிரீத்தி பால் (100, 200 மீ., ஓட்டம்) தடம் பதித்தார். உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் மாரியப்பன் வெண்கலம் வென்றார். தொடர்ந்து மூன்று பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என சாதனை படைத்தார். ஹர்விந்தர் சிங் (வில்வித்தை), தரம்பிர் (கிளப் த்ரோ), ஷீத்தல் தேவி (வில்வித்தை), சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்), அவனி (துப்பாக்கி சுடுதல்), கபில் பார்மர் (ஜூடோ) போன்றோர் பதக்கங்களை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தனர். அடுத்த பாராலிம்பிக்கில் (லாஸ் ஏஞ்சல்ஸ், 2028) இந்திய நட்சத்திரங்கள் இன்னும் அதிக பதக்கங்களை கைப்பற்றலாம். கண்கவர் விழாபாரிசில் 12 நாள் நடந்த பாராலிம்பிக் விளையாட்டு திருவிழா நேற்று நிறைவு பெற்றது. பாரிசில் உள்ள ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நிறைவு விழா நடந்தது. வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பில் இந்திய மூவர்ணக்கொடியை ஹர்விந்தர் சிங், பிரீத்தி பால் ஏந்தி வந்தனர். மயக்கும் இசை, கலக்கல் நடனம், பாடல், 'லேசர் ஷோ' உள்ளிட்ட கண்கவர் நிகழ்ச்சிகளுடன் விழா இனிதே முடிந்தது. இதுவே அதிகம்பாரிஸ் பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என, மொத்தம் 29 பதக்கம் கிடைத்தன. இதன்மூலம் ஒரு பாராலிம்பிக்கில் அதிக பதக்கம் வென்று சாதனை படைத்தது இந்தியா. இதற்கு முன், டோக்கியோ பாராலிம்பிக்கில் (2021) இந்தியாவுக்கு 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கம் கிடைத்திருந்தது.* பாராலிம்பிக்கில் 1968 முதல் 2021 வரை இந்தியா (9 தங்கம், 12 வெள்ளி, 10 வெண்கலம்) மொத்தம் 31 பதக்கம் வென்றது. இம்முறை பாரிசில் மட்டும் 29 பதக்கங்கள் கிடைத்தன.தடகளத்தில் ஆதிக்கம்பாரிஸ் பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு தடகளத்தில் 4 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என அதிகபட்சாமக 17 பதக்கம் கிடைத்தன. அடுத்து பாட்மின்டனில் 5, துப்பாக்கி சுடுதலில் 4, வில்வித்தையில் 2, ஜூடோவில் ஒரு பதக்கம் கிடைத்தன.18வது இடம்பாரிஸ் பாராலிம்பிக்கில் 7 தங்கம் உட்பட 29 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 18வது இடம் பிடித்தது. முதலிடத்தை சீனா தட்டிச் சென்றது.