ஜெருசலேம் மாஸ்டர்ஸ் செஸ்: அர்ஜுன் சாம்பியன்
ஜெருசலேம்: ஜெருசலேம் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் இந்தியாவின் அர்ஜுன் சாம்பியன் பட்டம் வென்றார்.இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில், மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடந்தது. மொத்தம் 12 பேர், 'ரவுண்டு ராபின்' முறையில் லீக் சுற்றில் மோதினர். முடிவில் 'டாப்-4' இடம் பிடித்த வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறினர். முதல் அரையிறுதியில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 1.5 - 0.5 என, ரஷ்யாவின் பீட்டர் ஸ்விட்லரை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 1.5 - 0.5 என, ரஷ்யாவின் இயான் நெபோம்னியாச்சியை வென்றார்.பைனலில் அர்ஜுன் 22, ஆனந்த் 55, மோதினர். இதன் முதலிரண்டு சுற்று 'டிரா' ஆனது. இதனையடுத்து போட்டியின் முடிவு 'டை பிரேக்கர்' முறைக்கு சென்றது. இதன் முதல் போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், 45வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இரண்டாவது போட்டி 'டிரா' ஆனது.முடிவில் அர்ஜுன் 2.5 - 1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.