தங்கம் வென்றார் முகிலேஷ்: ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதலில்
புதுடில்லி: ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் முகிலேஷ் (25 மீ., 'பிஸ்டல்') தங்கம் வென்றார்.டில்லியில், ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் நடந்தது. ஆண்களுக்கான 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு பைனலில் இந்தியாவின் முகிலேஷ் 585.23 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு இந்திய வீரர் சாஹில் சவுத்ரி (573.21 புள்ளி) வெண்கலம் வென்றார். மற்ற இந்திய வீரர்களான சமீர் (573.19), சோமில் சவுத்ரி (572.15), ராகவ் வர்மா (572.13) முறையே 4, 5, 7வது இடம் பிடித்தனர்.பெண்களுக்கான 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு பைனலில் இந்தியாவின் தேஜஸ்வினி, 30 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். மற்ற இந்திய வீராங்கனைகளான நாம்யா கபூர் (21), ரியா ஷிரிஷ் (16) 4, 5வது இடம் பிடித்தனர்.இத்தொடரில் 8 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலம் என, 26 பதக்கம் வென்ற இந்தியா, முதலிடத்தை கைப்பற்றியது.