சென்னையை வீழ்த்தியது மும்பை: அல்டிமேட் டேபிள் டென்னிசில்
சென்னை: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் போட்டியில் சென்னை அணி 7-8 என மும்பை அணியிடம் வீழ்ந்தது.சென்னையில், அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 5வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதின. பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் சென்னையின் மவுமா தாஸ் 2-1 (11-10, 11-8, 10-11) என மும்பையின் மரியா ஜியாவோவை வீழ்த்தினார். ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் சென்னையில் அஜந்தா சரத் கமல் 1-2 (11-6, 8-11, 9-11) என மும்பையின் மானவ் தாக்கரிடம் தோல்வியடைந்தார்.கலப்பு இரட்டையர் போட்டியில் சரத் கமல், சகுரா மோரி ஜோடி 0-3 (7-11, 10-11, 4-11) என மானவ், மரியா ஜோடியிடம் வீழ்ந்தது. பெண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் சென்னையில் சகுரா மோரி 3-0 (11-8, 11-10, 11-7) என மும்பையின் சுதிர்தா முகர்ஜியை வீழ்த்தினார். ஆண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் சென்னையின் ஜூல்ஸ் ரோலந்து 1-2 (11-10, 9-11, 7-11) என மும்பையின் அருணாவிடம் வீழ்ந்தார்.முடிவில் சென்னை அணி 7-8 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. சென்னை அணி 3 போட்டியில், ஒரு வெற்றி, 2 தோல்வியை பெற்றது.