| ADDED : ஏப் 18, 2024 10:48 PM
புதுடில்லி: பாரிஸ் ஒலிம்பிக் நீளம் தாண்டுதல் போட்டியில் இருந்து முழங்கால் காயத்தால் இந்தியாவின் ஸ்ரீசங்கர் விலகினார்.இந்திய நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஸ்ரீசங்கர் 25. காமன்வெல்த் விளையாட்டு (2022), ஆசிய விளையாட்டில் (2022) வெள்ளி வென்ற இவர், கடந்த ஆண்டு பாங்காக்கில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 8.37 மீ., தாண்டி வெள்ளி வென்றார். இதன்மூலம் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு (ஜூலை 26 - ஆக. 11) தகுதி பெற்றார்.ஷாங்காய் (ஏப். 27), தோகாவில் (மே 10) நடக்கவுள்ள டயமண்ட் லீக் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்ட போது முரளி ஸ்ரீசங்கரின் முழங்காலில் காயம் ஏற்பட்டது. காயத்தில் இருந்து பூரண குணமடைய 'ஆப்பரேஷன்' தேவைப்படுவதால் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து ஸ்ரீசங்கர் விலகினார்.ஸ்ரீசங்கர் கூறுகையில், ''பயிற்சியின் போது ஏற்பட்ட முழங்கால் காயத்தால் எனது பாரிஸ் ஒலிம்பிக் கனவு தகர்ந்துவிட்டது. விரைவில் 'ஆப்பரேஷன்' செய்ய உள்ளேன். உங்களது பிரார்த்தனை தேவைப்படுகிறது. இது விரைவில் போட்டிக்கு திரும்ப உதவும்,'' என்றார்.இதற்கு முன் டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாடிய முரளி ஸ்ரீசங்கர் (7.69 மீ.,) தகுதிச் சுற்றோடு திரும்பினார்.