ஒரே நாளில் இந்தியாவுக்கு 13 பதக்கம் * ஸ்பெஷல் ஒலிம்பிக்கில் அபாரம்
டுரின்: ஸ்பெஷல் ஒலிம்பிக் உலக குளிர்கால விளையாட்டில் ஒரே நாளில் இந்தியா 13 பதக்கம் கைப்பற்றியது.இத்தாலியில், அறிவுசார் குறைபாடுள்ள வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ஸ்பெஷல் ஒலிம்பிக் உலக குளிர்கால விளையாட்டு 12வது சீசன் நடக்கிறது. நேற்று நான்காவது நாள் போட்டி நடந்தன.ஆல்பைன் ஸ்கீயிங் 'எம் 04' பிரிவில் இந்தியாவின் தீபக் தாகூர் தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இப்பிரிவில் தங்கம் கைப்பற்றிய முதல் இந்தியர் ஆனார். ஆல்பைன் ஸ்கீயிங் 'எம் 05' பிரிவில் கிரிதர், தங்கம் வசப்படுத்தினார். இந்த இரு பிரிவிலும் இந்தியாவின் அபிஷேக் குமார், ராதா தேவி வெள்ளி வென்றனர்.நேற்று 'ஸ்னோஸ்ஷூயிங்' (பனிச்சறுக்கு) போட்டிகளில் இந்தியாவுக்கு 2 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என 6 பதக்கம் கிடைத்தன. 50 மீ., எம் 03 பிரிவில் வாசு திவாரி தங்கம் வென்றார். 200 மீ., எம் 12 பைனலில் அசத்திய அனில் குமார், தங்கம் வசப்படுத்தினார்.ஜஹாங்கிர் (50 மீ., எம் 04), தான்யா (50 மீ., எப் 02), ஹர்லீன் கவுர் (200 மீ., எப் 12) தங்களது பிரிவுகளில் வெள்ளிப்பதக்கம் வென்றனர். மற்றொரு இந்திய வீராங்கனை ஷாலினி (50 மீ., எப் 03) வெண்கலம் கைப்பற்றினார்.ஒட்டுமொத்தமாக நேற்றைய நான்காவது நாளில் இந்தியாவுக்கு 13 பதக்கம் கிடைத்தன. இதுவரை இந்தியாவுக்கு 8 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கம் கைப்பற்றியுள்ளது.