புதுடில்லி: ''நாட்டின் வளர்ச்சியில் விளையாட்டுக்கு முக்கிய பங்கு உண்டு. விளையாட்டு அரங்கில் இந்தியா வல்லரசாக உருவெடுக்க வேண்டும்,''என பிரதமர் மோடி தெரிவித்தார்.ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில், செஸ் ஒலிம்பியாட் நடந்தது. ஓபன், பெண்கள் பிரிவில் அசத்திய இந்தியா முதல் முறையாக இரு தங்கம் வென்று வரலாறு படைத்தது. தமிழகத்தின் குகேஷ், பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி உள்ளிட்ட வீரர்கள் அசத்தினர். தமிழத்தின் வைஷாலி, ஹரிகா, திவ்யா, தானியா, வந்திகா உள்ளிட்ட வீராங்கனைகள் சாதித்தனர். தங்கம் வென்ற இந்திய செஸ் நட்சத்திரங்கள், பிரதமர் மோடியை அவரது டில்லி வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவர்களுடன் மோடி கலந்துரையாடினார். மோடி: இந்திய ஆண்கள் அணியினர் (ஓபன்) 22ல் 21 புள்ளி, பெண்கள் மொத்தம் உள்ள 22ல் 19 புள்ளி பெற்றது எப்படி? நாம் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய நிலையில், எதிரணியினர் எப்படி உணர்ந்தனர்?ஹரிகா: எதிரணியினர் எங்களது ஆட்டத்தை கண்டு வியந்தனர். அபார வெற்றிக்காக பாராட்டினர்.தானியா: எதிரணியினரால் எங்களை நெருங்க கூட முடியவில்லை. அந்த அளவுக்கு சிறப்பாக காய் நகர்த்தி, தரமான வெற்றியை பெற்றோம். கடந்த முறை அமெரிக்காவிடம் வீழ்ந்தோம். இந்த முறை அமெரிக்காவுக்கு எதிராக உறுதியுடன் செயல்பட்டு வென்றோம். குகேஷ்: இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பான 'பார்மில்' இருந்தனர். கடந்த ஒலிம்பியாட்டில் முக்கியமான ஒரு போட்டியில் நான் தோற்றதால், தங்கம் நழுவியது. இந்த முறை வெற்றிக்கான உத்வேகம் அதிகம் இருந்தது. கூட்டு முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. மோடி: செஸ் போட்டியின் எதிர்காலத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏ.ஐ.,) நிர்ணயிக்கும் என்கிறார்கள்... வீரர்கள் கம்ப்யூட்டர் உடன் விளையாடி தங்களது திறமையை சோதிப்பது குறித்து?பிரக்ஞானந்தா: ஏ.ஐ., வரவால், செஸ் விளையாட்டு பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது. சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர்கள் புதுப்புது வியூகங்களை சொல்லித் தருகின்றன.விதித்: ஏ.ஐ., வசதி அனைவருக்கும் கிடைப்பதால், செஸ் உலகம் விரிவடைந்துவிட்டது. தானியா: விளையாட்டு மீதான உங்களது ஆர்வம் பற்றி சொல்லுங்களேன்...மோடி: ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதாரத்தை மட்டும் சார்ந்தது இல்லை. வளர்ச்சி என்பது அனைத்து துறையிலும் இருக்க வேண்டும். சினிமாவை பற்றி பேசினால், நமது படங்கள் எத்தனை ஆஸ்கர் விருதுகள் வென்றுள்ளன என பார்க்க வேண்டும். அறிவியலை பற்றி பேசினால், எத்தனை நோபல் பரிசு கிடைத்துள்ளது என்பதை கணக்கில் கொள்ள வேண்டும். இது போல நமது நட்சத்திரங்கள் அதிக தங்கப்பதக்கங்கள் வெல்லும் போது, நமது நாடும் விளையாட்டு வல்லரசாக உச்சம் தொடும். அன்று விதைத்தது...'செஸ் விளையாடுவதன் மூலம் வாழ்வில் ஏற்படும் நுாற்றுக்கணக்கான வலிகளை போக்கலாம்' என பிரதமர் மோடி சொல்வதுண்டு. குஜராத் முதல்வராக இருந்த போது, 2009ல் ஆமதாபாத் பள்ளிகளில், செஸ் கட்டாய பாடம் என அறிவித்தார்.* 2010ல் 20,000 பேர் ஒரே நேரத்தில் விளையாடிய ஸ்வர்னிம் செஸ் திருவிழாவை ஆமதாபாத்தில் நடத்தி கின்னஸ் சாதனை படைத்தார்.* 2012ல் விவேகானந்தர் நினைவு மகிளா செஸ் மகா உத்சவை காந்திநகரில் நடத்தினார்.'ஆண்களுக்கான போட்டி மட்டும் அல்ல செஸ். பெண்களும் சாதிக்கலாம்' என்றார். இதில் 3,500 பெண்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் இரு பதக்கம் வென்ற வந்திகாவை மோடி பாராட்டினார். அப்போது எடுத்த போட்டோவை மோடிக்கு பரிசாக வழங்கினார். வந்திகா கூறுகையில்,''எனது 9 வயதில் மோடி கவுரவித்தார். தற்போது ஒலிம்பியாட் பதக்கத்துடன் அவரை மீண்டும் சந்தித்தேன். எனது பிறந்தநாளை (செப். 28) நினைவில் வைத்து வாழ்த்தியதை நம்ப முடியவில்லை,''என்றார் மோடி கூறுகையில்,''இந்த போட்டோ 'ஸ்பெஷல்' பரிசு. மகிழ்ச்சியாக உள்ளது,''என்றார்.
இந்திய கொடியுடன் பாக்., அணி
செஸ் ஒலிம்பியாட் முடிந்த தருணத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணியினர் 'போட்டோ' எடுத்துக் கொண்டனர். அப்போது பாகிஸ்தான் அணியினரும் இந்திய மூவர்ணக்கொடியை பிடித்திருந்தனர். இந்த 'வீடியோ' வைரல் ஆகியுள்ளது.சமீபத்திய ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி பைனலில் இந்திய அணி, சீனாவை வீழ்த்தி கோப்பை வென்றது. 'கேலரி'யில் இருந்த பாகிஸ்தான் வீரர்கள், சீன கொடியுடன், அந்நாட்டுக்கு ஆதரவு அளித்தது சர்ச்சையானது.