இந்தியாவுக்கு இரண்டு தங்கம்: உலக துப்பாக்கி சுடுதலில்
கெய்ரோ: உலக துப்பாக்கி சுடுதலில் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 2 தங்கம் கிடைத்தது.எகிப்தில், உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ('ரைபிள்' / 'பிஸ்டல்') தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் அசத்திய இந்தியாவின் சாம்ராட் ராணா (586.27 புள்ளி), வருண் தோமர் (586.26) முதலிரண்டு இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தனர். அடுத்து நடந்த பைனலில் அசத்திய சாம்ராட், 243.7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றார். மூன்றாவது இடம் பிடித்த வருண் (221.7) வெண்கலம் கைப்பற்றினார்.ஆண்கள் அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் சாம்ராட், வருண், ஷர்வன் குமார் அடங்கிய இந்திய அணி 1754.69 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது.அனிஷ் 'வெள்ளி': ஆண்களுக்கான 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' பைனலில் அசத்திய அனிஷ், 28 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.பெண்கள் அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் ஈஷா சிங் (583.25), மனு பாகர் (580.20), சுருச்சி இந்தர் சிங் (577.17) அடங்கிய இந்திய அணி 1740.62 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றது.இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என, 9 பதக்கம் கைப்பற்றிய இந்தியா 2வது இடத்துக்கு முன்னேறியது. முதலிடத்தில் சீனா (6 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம்) நீடிக்கிறது.