கோ கோ உலக கோப்பை: சாதிக்குமா இந்தியா
புதுடில்லி: 'கோ கோ' உலக கோப்பை இன்று டில்லியில் துவங்குகிறது. சொந்த மண்ணில் இந்திய அணிகள் கோப்பை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.டில்லியில், சர்வதேச 'கோ கோ' கூட்டமைப்பு சார்பில் 'கோ கோ' உலக கோப்பை முதல் சீசன் இன்று துவங்குகிறது. மொத்தம் 23 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் 20 ஆண்கள், 19 பெண்கள் அணிகள் களமிறங்குகின்றன.மொத்தமுள்ள 20 ஆண்கள் அணிகள், 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள், 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும். இதில் காலிறுதி (ஜன. 17), அரையிறுதி (ஜன. 18) நடத்தப்படும். பைனல், ஜன. 19ல் நடக்கும். இதேபோல பெண்களுக்கான போட்டிகளும் நடத்தப்படும்.இந்திய ஆண்கள் அணி, 'ஏ' பிரிவில் பூடான், பிரேசில், நேபாளம், பெரு அணிகளுடன் இடம் பிடித்துள்ளது. இன்று நடக்கும் முதல் போட்டியில் இந்திய அணி, நேபாளத்தை சந்திக்கிறது. அதன்பின் பிரேசில் (ஜன. 14), பெரு (ஜன. 15), பூடான் (ஜன. 16) அணிகளை எதிர்கொள்கிறது.இந்திய பெண்கள் அணி 'ஏ' பிரிவில் ஈரான், மலேசியா, தென் கொரியா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இந்திய அணி, தனது முதல் போட்டியில் நாளை தென் கொரியாவை சந்திக்கிறது. அதன்பின் ஈரான் (ஜன. 15), மலேசியாவுடன் (ஜன. 16) மோதுகிறது.