உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உலக தடகளம்: அசத்துமா இந்தியா

உலக தடகளம்: அசத்துமா இந்தியா

புதுடில்லி: உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடர் (20 வயதுக்குட்பட்ட) பெருவில் உள்ள லிமா நகரில் இன்று துவங்குகிறது. ஆக. 31 வரை நடக்கும் இதில் 134 நாடுகளில் இருந்து மொத்தம் 1720 வீரர், வீராங்கனை பங்கேற்க உள்ளனர். இதில் இந்திய நட்சத்திரங்கள் அசத்த காத்திருக்கின்றனர். கடந்த சீசனில் இந்தியா, இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என 3 பதக்கத்துடன் பட்டியலில் 25வது இடம் பிடித்தது. இம்முறை இந்திய அணியில் 23 வீரர், 20 வீராங்கனை என மொத்தம் 43 பேர் களமிறங்குகின்றனர். மொத்தம் நடக்கும் 45 பிரிவுகளில் இந்திய நட்சத்திரங்கள் 30 போட்டிகளில் திறமை வெளிப்படுத்த உள்ளனர்.நீரஜ் வரிசையில்...கடந்த 2016ல் போலந்தில் நடந்த போட்டியில் ஜூனியராக களமிறங்கிய நீரஜ் சோப்ரா, 86.48 மீ., துாரம் ஈட்டி எறிந்து தங்கம் வசப்படுத்தினார். இவரை போல இளம் இந்திய வீரர்களும் சாதிக்கலாம். 400 மீ., தடை ஓட்டத்தில் முராத் சிர்மான் பதக்கம் வெல்ல வாய்ப்பு உண்டு. 10,000 மீ., நடை ஓட்டத்தில் உலக ஜூனியர் அரங்கில் இந்தியாவின் ஹிமான்சு (41 நிமிடம், 55.40 வினாடி), சச்சின் (41:55.87) என இருவரும் 'டாப்-10' பட்டியலில் உள்ளனர். இவர்கள் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தவிர, 400 மீ., ஓட்டத்தில் களமிறங்கும் நீரு பதக், 10,000 மீ., பந்தயத்தில் பங்கேற்க உள்ள ஆர்த்தி நம்பிக்கை தர காத்திருக்கின்றனர். கடந்த 2022ல் 4X400 மீ., தொடர் ஓட்டத்தில் இந்திய கலப்பு அணி வெள்ளி வென்றது. தற்போது நீரு பதக், ஹன்ஸ்டா, ரிகான், சந்திமோல், ஷ்ரவனி, ஜெய் குமார் கூட்டணி, இந்தியாவுக்கு தங்கம் வென்ற தரலாம். தவிர, தமிழகத்தின் கார்த்திக் ராஜா ஆறுமுகம் (400 மீ., தடை ஓட்டம்), ஹரிஹரன் கதிரவன் (110 மீ., தடை ஓட்டம்), அபிநயா (100 மீ., 4X100 மீ., தொடர் ஓட்டம்), லக்சியா (800 மீ.,), பாவனா (நீளம் தாண்டுதல்), தமன்னா (குண்டு எறிதல்), தேவ் குமார் மீனா (போல் வால்ட்), பிரதீக் குமார் ('ஹாம்மர் த்ரோ') உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !