உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி: யு.எஸ்., ஓபனில் ஏமாற்றம்

ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி: யு.எஸ்., ஓபனில் ஏமாற்றம்

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் உலகின் 'நம்பர்-2' செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 28வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின் மோதினர். மூன்று மணி நேரம், 19 நிமிடம் நீடித்த போட்டியில் ஜோகோவிச் 4-6, 4-6, 6-2, 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.இதன்மூலம் 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ள தவறிய ஜோகோவிச், தனது 25வது கிராண்ட்ஸ்லாம், 100வது ஏ.டி.பி., பட்டம் வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்தார். இது, யு.எஸ்., ஓபனில் ஜோகோவிச்சின் மோசமான செயல்பாடானது. இதற்கு முன் 2005, 2006ல் 3வது சுற்றோடு வெளியேறினார்.ஜோகோவிச் கூறுகையில், ''மூன்றாவது சுற்று, நான் விளையாடிய மோசமான போட்டிகளில் ஒன்றாக அமைந்தது. பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல முழுத்திறமையை வெளிப்படுத்தியதால், இத்தொடருக்கு உடல், மனதளவில் தயாராகவில்லை,'' என்றார்.கோகோ காப் வெற்றி: பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் 'நடப்பு சாம்பியன்' அமெரிக்காவின் கோகோ காப் 3-6, 6-3, 6-3 என உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தினார். பெலாரசின் அரினா சபலென்கா 2-6, 6-1, 6-2 என ரஷ்யாவின் எகடெரினா அலெக்சாண்ட்ரோவாவை வென்றார்.

'பிக்-3' ஏமாற்றம்

டென்னிஸ் அரங்கில் 'பிக்-3' என்று அழைக்கப்படும் சுவிட்சர்லாந்தின் பெடரர் (20 பட்டம்), ஸ்பெயினின் நடால் (22), செர்பியாவின் ஜோகோவிச் (24) 'கிராண்ட்ஸ்லாம்' தொடரில் ஆதிக்கம் செலுத்தினர். இதில் பெடரர் ஓய்வு, நடால் காயத்தால் விலக (ஆஸி., ஓபன், விம்பிள்டன், யு.எஸ்., ஓபன்), இந்த ஆண்டு நடந்த 4 கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஜோகோவிச் ஒரு கோப்பை கூட வெல்ல முடியவில்லை. இதன்மூலம் 2002க்கு பின், பெடரர்-நடால்-ஜோகோவிச் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் கூட பெறமுடியாத சோகம் அரங்கேறியது.போபண்ணா, பாம்ப்ரி அபாரம்ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டென் ஜோடி 6-2, 6-4 என ஸ்பெயினின் ராபர்டோ கார்பால்ஸ், அர்ஜென்டினாவின் பெடரிகோ கோரியா ஜோடியை வீழ்த்தியது.* மற்றொரு 2வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பானோ ஒலிவெட்டி ஜோடி 4-6, 6-3, 7-5 என அமெரிக்காவின் ஆஸ்டின், நெதர்லாந்தின் ஜீன்-ஜூலியன் ரோஜர் ஜோடியை வென்றது.* மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, அர்ஜென்டினாவின் ஆன்ட்ரியோசி ஜோடி 6-7, 4-6 என நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ், பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி ஜோடியிடம் வீழ்ந்தது.* கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா, இந்தோனேஷியாவின் அல்டிலா சுட்ஜியாடி ஜோடி 7-6, 7-6 என ஜெர்மனியின் டிம் புயெட்ஸ், நெதர்லாந்தின் டெமி ஜோடியை தோற்கடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ