உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / கிரெஜ்சிகோவா புதிய சாம்பியன்: விம்பிள்டன் டென்னிசில் அசத்தல்

கிரெஜ்சிகோவா புதிய சாம்பியன்: விம்பிள்டன் டென்னிசில் அசத்தல்

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையரில் செக்குடியரசின் கிரெஜ்சிகோவா முதன்முறையாக கோப்பை வென்றார்.இங்கிலாந்தின் லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-7' இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினி, 31வது இடத்தில் உள்ள செக்குடியரசின் பார்பொரா கிரெஜ்சிகோவா மோதினர். முதல் செட்டை கிரெஜ்சிகோவா 6-2 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட பாவ்லினி, இரண்டாவது செட்டை 6-2 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் சுதாரித்துக் கொண்ட கிரெஜ்சிகோவா 6-4 என வென்றார்.ஒரு மணி நேரம், 56 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய கிரெஜ்சிகோவா 6-2, 2-6, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று விம்பிள்டனில் தனது முதல் ஒற்றையர் பிரிவு பட்டத்தை கைப்பற்றினார். தவிர இது, இவரது 2வது கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டம். இதற்கு முன் 2021ல் பிரெஞ்ச் ஓபனில் கோப்பை வென்றிருந்தார்.பைனலில் வெற்றி பெற்ற கிரெஜ்சிகோவாவுக்கு சாம்பியன் கோப்பையுடன் ரூ. 28 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த பாவ்லினிக்கு ரூ. 13 கோடி கிடைத்தது.

சாதிப்பாரா ஜோகோவிச்

ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-2' செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 3வது இடத்தில் உள்ள 'நடப்பு சாம்பியன்' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் மோதுகின்றனர். இதில் ஜோகோவிச் வெற்றி பெற்றால், கடந்த ஆண்டு விம்பிள்டன் பைனலில் அல்காரசிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கலாம். விம்பிள்டனில் அதிக முறை கோப்பை (தலா 8) வென்ற வீரர்கள் வரிசையில் முதலிடத்தை சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரருடன் பகிர்ந்து கொள்ளலாம். தவிர, கிராண்ட்ஸ்லாம் ஒற்றையரில் 25 பட்டம் வென்ற முதல் டென்னிஸ் நட்சத்திரம் என்ற வரலாறு படைக்கலாம். இதுவரை ஜோகோவிச், ஆஸ்திரேலிய வீராங்கனை மார்கரேட் கோர்ட் தலா 24 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டம் வென்றுள்ளனர்.அல்காரஸ் வெற்றி பெறும் பட்சத்தில், விம்பிள்டனில் 2வது பட்டத்தையும், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 4வது கோப்பை வெல்லலாம். ஏ.டி.பி., டென்னிஸ் அரங்கில் இருவரும் 5 முறை நேரடியாக மோதினர். இதில் ஜோகோவிச் 3, அல்காரஸ் 2ல் வெற்றி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ