| ADDED : ஜூலை 14, 2024 11:10 PM
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையரில் ஸ்பெயினின் அல்காரஸ் மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில் செர்பியாவின் ஜோகோவிச்சை தோற்கடித்தார்.இங்கிலாந்தின் லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-2' செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 3வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் மோதினர். 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கிய அல்காரஸ், முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய இவர், இரண்டாவது செட்டையும் 6-2 என தட்டிச் சென்றார். 'டை பிரேக்கர்' வரை சென்ற மூன்றாவது செட்டை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஜோகோவிச் 6-7 எனக் கோட்டைவிட்டார்.இரண்டு மணி நேரம், 27 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய அல்காரஸ் 6-2, 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, மீண்டும் சாம்பியன் ஆனார். விம்பிள்டனில் தனது 2வது பட்டத்தை (2023, 2024) கைப்பற்றிய அல்காரஸ், ஒட்டுமொத்தமாக 4வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார். ஏற்கனவே யு.எஸ்., ஓபன் (2022), பிரெஞ்ச் ஓபனில் (2024) கோப்பை வென்றிருந்தார். இவருக்கு சாம்பியன் பட்டத்துடன் ரூ. 28 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.முழங்கால் காயத்துடன் பங்கேற்ற ஜோகோவிச், தனது 25வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டார். இவருக்கு ரூ. 13 கோடி பரிசு கிடைத்தது.