உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / அரியலூர் / அரியலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் துவக்கம் ஹைகோர்ட் தலைமை நீதிபதி பங்கேற்பு

அரியலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் துவக்கம் ஹைகோர்ட் தலைமை நீதிபதி பங்கேற்பு

அரியலூர் : அரியலூரில் இன்று 24ம் தேதி மாவட்ட அமர்வு நீதிமன்றம் துவக்க விழா நடக்கிறது. கடந்த 1885ம் ஆண்டு துவக்கப்பட்ட அரியலூர் நீதிமன்ற வளாகத்தில், விரைவு நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் மன்றம் உள்ளிட்ட ஐந்து நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. அரியலூரில் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உள்ளிட்ட மாவட்ட அளவிலான, அனைத்து நீதிமன்றங்களையும் அமைக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி, கடந்த 14 ஆண்டுகளாக வக்கீல்கள், வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், நூதன தொடர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அரியலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அமைக்க, கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதை ஏற்று கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், பெரம்பலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தை பிரித்து, அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நீதிமன்றங்களை உள்ளடக்கிய, அரியலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை, கடந்த ஜூலை மாதம் செயல்படுத்த துவங்கியது. இதையடுத்து அரியலூர் கீதா மஹால் திருமண மண்டபத்தில், இன்று 24ம் தேதி நடக்கும், அரியலூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற துவக்க விழாவுக்கு, தமிழக சட்டத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புதுறை அமைச்சர் செந்தமிழன் தலைமை வகிக்கிறார். பெரம்பலூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெ.வி. ராஜ் வரவேற்கிறார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், புதிய அரியலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தை துவக்கி வைத்து பேசுகிறார். விழாவில் இஃப்பத் இக்பால் குத்து விளக்கு ஏற்றுகிறார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன், அரியலூர் கலெக்டர் அனு ஜார்ஜ், அரியலூர் வக்கீல் சங்க தலைவர்கள் கோதண்டபாணி, வெங்கடாஜலம், ஜெயங்கொண்டம் வக்கீல் சங்க தலைவர்கள் ராஜேந்திரன், ஃபிரான்ஸிஸ் சேவியர் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசுகின்றனர். பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி குப்புசாமி நன்றி கூறுகிறார். * அரியலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் துவக்கவிழாவை முன்னிட்டு, நூறாண்டு பழமை வாய்ந்த அரியலூர் நீதிமன்ற வளாகத்தை புதுப்பிக்கும் பணி, கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதை பெரம்பலூர் மாவட்ட அமர்வு நீதிபதி ஜெ.வி.ராஜ், மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி குப்புசாமி, அரியலூர் மாவட்ட விரைவு நீதிபதி சிவக்குமார், சார்பு நீதிபதி ரவி, மாவட்ட உரிமையியல் நீதிபதி தேன்மொழி, மேஜிஸ்ட்ரேட் ராஜ்குமார் உள்ளிட்ட நீதிபதிகள், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அரியலூர் வக்கீல் சங்க தலைவர் கோதண்டபாணி, வக்கீல்கள் சங்கர், முத்துக்குமார், சண்முகம், பாஸ்கர், சிவாஜி, சுந்தர்பாரதி, மனோகரன், ராஜா, சிராஜூதீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை