| ADDED : ஜன 15, 2024 01:54 AM
மதுராந்தகம் : செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்துள்ள படாளத்தில், கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக அரவைப் பணி, நான்கு நாட்களாக நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு, அரவைப் பணி மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.இது குறித்து இணை பதிவாளர் ஜவகர் பிரசாத்ராஜ் கூறியதாவது:மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், எதிர்பாராத விதமாக கடந்த ஜன., 7 மற்றும் 8ல் பெய்த பலத்த மழை காரணமாக, ஆலையில் கொதிகலன் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து விட்டதால், கரும்பு சக்கை அனைத்தும் ஈரமானது.தொடர்ந்து, கொதிகலன்களுக்கு கரும்பு சக்கை வழங்க இயலவில்லை. இதனால், கொதிகலனில் நீராவி அழுத்தம் குறைந்து அரவை தடைபட்டது.எனவே, ஆலையில் கரும்பு சக்கை ஈரமாக இருந்ததால், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையிலிருந்து உலர் கரும்பு சக்கை கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து ஆயத்தப் பணிகளையும் மேற்கொண்டு, 888 டன்கள் அரவை செய்யப்பட்டது.மேலும், தேவைக்கு ஏற்ப மீண்டும் திருத்தணி மற்றும் கள்ளக்குறிச்சி - 1 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளிலிருந்து கரும்பு சக்கை கொள்முதல் செய்து, அரவையை துவக்கி, 2,000 மெ.டன்கள் வீதம் அரவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கரும்பு லோடுகள் ஏற்றி வரும் லாரி ஓட்டுனர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.