| ADDED : ஜூன் 01, 2024 11:54 PM
சித்தாமூர்:சித்தாமூர் அருகே சிறுமயிலுார் கிராமத்தில், 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.இந்த ஏரியின் வாயிலாக, 400 ஏக்கர் வயல்வெளி நீர்ப்பாசனம் பெறுகிறது. விவசாயமே இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாக உள்ளது. நெல், மணிலா, உளுந்து போன்றவை விவசாயம் செய்யப்படுகின்றன.சிறுமயிலுார் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், மதகுகள் வாயிலாக விவசாய நிலங்களுக்கு செல்கிறது.இந்த ஏரி, 40 ஆண்டுகளாக துார்வாரி சீரமைக்கப்படாத்தால், மழைக்காலத்தில் ஏரியில் போதிய நீரை தேக்க முடியாத சூழல் உள்ளது.இதனால், இப்பகுதியில் கோடைகாலத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும், ஏரி உபரிநீர் கால்வாயும் சீரமைக்கப்படாததால், மழைக்காலத்தில் ஏரியில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, விவசாய நிலங்கள் சேதப்படுவதாக கூறப்படுகிறது.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, ஏரியை துார்வாரி சீரமைத்து, ஏரி உபரிநீர் கால்வாயில் தடுப்பணைகள் அமைத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.