குரோம்பேட்டை : மழைக்காலத்தில், மெப்ஸ் ஏற்றுமதி வளாகம், பச்சைமலை, பேருந்து நிறுத்தம், சித்த மருத்துவமனை ஆகிய இடங்களில் இருந்து வெளியேறும் மழைநீர், தாம்பரம் சானடோரியம், ஆஞ்சநேயர் கோவில் அருகே ஜி.எஸ்.டி., சாலை - ரயில்வே லைனை கடந்து, சிட்லபாக்கம் ஏரிக்கு செல்லும்.இதற்காக, ஜி.எஸ்.டி., சாலை மற்றும் ரயில் லைனின் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை சார்பில் கட்டப்பட்ட கால்வாய் முறையாக பராமரிக்காததால், அடைப்பு ஏற்பட்டு சுருங்கியது. அதேபோல், ரயில்வே லைன் வழியாக செல்லும் கால்வாயும் சுருங்கி விட்டது.இதன் காரணமாக, ஒவ்வொரு மழையின் போதும், குறிப்பிட்ட அந்த இடத்தில், மழைநீர் செல்ல வழியின்றி, தடைபட்டு வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்து விடுகிறது.ஒவ்வொரு மழையின்போதும், இப்பிரச்னை நீடித்தும், நெடுஞ்சாலைத் துறை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளவில்லை. இது தொடர்பாக, பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்த நிலையில், நீண்ட நாட்கள் போராட்டத்திற்கு பின், பழைய கால்வாயை அகற்றி, புதிதாக பாக்ஸ் கல்வெட்டு பொருத்தும் பணி நடந்து வருகிறது.