மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் கடைகள் அமைக்க கூடுதலாக நிதி
மதுராந்தகம்:மதுராந்தகத்தில், 30 ஆண்டுகளுக்கு முன், அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. சித்தாமூர், பவுஞ்சூர், சூணாம்பேடு, அச்சிறுபாக்கம், ஒரத்தி, வேடந்தாங்கல், பெரும்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த, 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வந்தனர்.செங்கல்பட்டு, தாம்பரம் போன்ற நகரப் பகுதிகளுக்கு பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர் மற்றும் வெளியூர் பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர் என, நாள்தோறும் 5,000த்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், பேருந்து நிலையம் பழமையானதால், மழைக்காலங்களில் நீர் கசிவு ஏற்பட்டு, பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.இதன் காரணமாக, 2.10 ஏக்கர் பரப்பளவில் இருந்த பழைய பேருந்து நிலையம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு, மீண்டும் அதே பகுதியில், புதிதாக பேருந்து நிலையம் அமைக்க, கலைஞர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதற்கான பணிகள், கடந்த பிப்ரவரி மாதம் பூமி பூஜையுடன் துவங்கியது. இதில், 40 சதவீதம் பணிகள் நடந்து முடிந்துள்ளன.இந்நிலையில், பழைய பேருந்து நிலையத்தில், 40 வியாபாரிகள் கடை வைத்து இருந்தனர். புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில், 20 கடைகள் மட்டுமே அமைக்கப்பட்டு வருகின்றன.இதனால், நகராட்சிக்கு வருவாய் வரும் வகையில், கூடுதலாக கடைகள் அமைக்க வேண்டும் என, மதுராந்தகம் பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கத்தினர், கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.இந்நிலையில், பேருந்து நிலையத்தில் முதல் தளம் அமைத்து, கடைகள் அமைப்பதற்காக, கூடுதலாக 1.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, நகராட்சி பொறியாளர் நித்யா கூறியதாவது:மதுராந்தகம் நகராட்சியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள், 40 சதவீதம் நடந்து முடிந்துள்ளன. பேருந்து நிலையத்தில் முதல் தளம் அமைக்க, கூடுதலாக 1.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இன்னும் சில மாதங்களில், பணிகள் அனைத்தும் முடித்து, பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டு, பணிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.