| ADDED : மார் 23, 2024 10:19 PM
செங்கல்பட்டு:சென்னை சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் முருகன், 38. இவர், நேற்று முன்தினம் இரவு தன் குடும்பத்துடன், 'டாடா' சரக்கு வாகனத்தில் செஞ்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனுார் சுங்கச்சாவடியில், கட்டணம் செலுத்துவது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், சுங்கச்சாவடி ஊழியர்கள் முருகனை சரமாரியாக தாக்கினர். இதனால் ஆத்திரமடைந்த முருகன் குடும்பத்தினர், சுங்கச்சாவடி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக மற்ற வாகன ஓட்டிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீசார், காயமடைந்த முருகனை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதையடுத்து, மற்ற வாகன ஓட்டிகள் கலைந்து சென்றனர். இதுகுறித்து முருகன் அளித்த புகாரின்படி, செங்கல்பட்டு தாலுகா போலீசார் சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் பரனுார் சுங்கச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.