மெட்ரோ வாகன நிறுத்தங்களில் கூரை அமைக்க கோரி வழக்கு
சென்னை: மெட்ரோ ரயில் நிலைய வாகனம் நிறுத்துமிடங்களில் கூரை அமைக்க கோரி, வழக்கு தொடரப்பட்டு உள்ளது. சென்னை, புரசைவாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஞானேஸ்வரன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும் இடங்கள், மிகவும் சிறியளவில் உள்ளன. இந்த வாகன நிறுத்தங்களில் கூரை வசதிகள் இல்லாததால், வெயில், மழையில் நனைந்து பாழாய் போகின்றன. வாகன நிறுத்தும் இடங்களில் போதியளவில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. ஏற்கனவே, அங்கு பொருத்தப்பட்டு இருக்கும் கேமராக்களும் சேதமடைந்துள்ளன.போதியளவில் 'சிசிடிவி' இல்லாததால் வாகனங்கள் திருட்டு, பெட்ரோல் திருட்டு நடக்கிறது.நடுத்தர மக்கள் கஷ்டப்பட்டு வாகனங்கள் வாங்குகின்றனர். அந்த வாகனங்கள் மெட்ரோவில் 'பார்க்கிங்' செய்யும் போது, கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஆனால், வாகனங்கள் நிறுத்த போதிய வசதிகள் செய்யப்படுவதில்லை.இவ்விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை கோரி, ஜூன் 26ல் அளித்த மனு மீது, மெட்ரோ ரயில் நிர்வாகம், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கூரையுடன் கூடிய வாகன நிறுத்தங்களை அமைக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் அமர்வு, மனுதாரரின் கோரிக்கை மனுவை 12 வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, மனுவை முடித்து வைத்தது.