| ADDED : மார் 25, 2024 05:28 AM
மதுராந்தகம் : மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் என அழைக்கப்படும், ஸ்ரீ கோதண்டராமர் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.இத்திருத்தலத்தில், உலகில் வேறெங்கும் காண முடியாத மூலவர் சன்னதியில், ராமர் சீதையை கைப்பற்றியவாறு திருமணக்கோலத்தில் அமைந்திருப்பது சிறப்பு பெற்றது.ராமானுஜருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்த இத்தலத்திற்கு, த்வியம் விளைந்த திருப்பதி என, மற்றொரு பெயரும் உண்டு.இத்திருக்கோவிலில், தேர்த்திருவிழா மிக விமரிசையாக நடைபெற்று வந்தது. இந்தாண்டு, கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, கடந்த ஆண்டு, பாலாலயம் செய்யப்பட்டு, கண்ணாடி அறைக்குள் சாமி வைக்கப்பட்டு உள்ளது.தற்போது, உபயதாரர்கள் நிதியின் வாயிலாக, தேரின் விஸ்தார மேல்மட்ட கொடுங்கை, 75 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.தேரின் அடிபீடம் 15 அடி மற்றும் விஸ்தார மேல்மட்ட கொடுங்கையுடன் சேர்த்து, 52 அடியில் தேர் முழுவதும் மரத்தால் வடிவமைக்கப்பட்டு வருகிறது.அனைத்து பணிகளும் மே மாதம் இறுதிக்குள் முடிந்து, இந்தாண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாக, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.