கூடுதல் விலைக்காக திறக்கப்படாத நெல் கொள்முதல் நிலையங்கள்
மதுராந்தகம் : செங்கல்பட்டு மாவட்டத்தில் சொர்ணவாரி நெல் சாகுபடியில், 12,703 ஹெக்டேர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.மதுராந்தகம் அடுத்த படாளம், புளிப்பரக்கோவில், கிணார், பூதுார், ஈசூர், எல்.என்.புரம், ஏர்பாக்கம் பகுதிகளில், நெல் அறுவடை செய்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், 30 நாட்களுக்கு மேலாக, அரசு நேரடி நெல் கொள்முதல் செய்யும் இடத்தில் கொட்டி வைத்து, விவசாயிகள் காத்து கிடக்கின்றனர்.மதுராந்தகம் வட்டாரத்தில் கிணார், படாளம் பகுதியில், நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என, கடந்த வாரம் கலெக்டர் உத்தரவிட்டார்.இருப்பினும், தமிழக அரசு சார்பில், குவிண்டாலுக்கு ஆதார விலையாக 2,320 ரூபாயும், சன்ன ரகத்துக்கு ஊக்கத்தொகையாக 130 ரூபாய் என, மொத்தம் 2,450 ரூபாய் வழங்கப்படுகிறது.அதேபோல், பொது ரகத்துக்கு குவிண்டாலுக்கு 2,302 ரூபாயும், ஊக்கத்தொகை 103 ரூபாய் சேர்த்து, மொத்தம் 2,405 ரூபாய் வழங்கப்படுகிறது.இதனால், படாளம், கிணார் உள்ளிட்ட பகுதிகளில், தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாமல் உள்ளது.இந்நிலையில், சிறு, குறு தொழில் துறை அமைச்சர் அன்பரசன், கடந்த 28ம் தேதி திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைத்தார்.அப்போது, முதல் தவணையாக ஒன்பது இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது என அறிவித்தார். ஆனால், அப்பகுதிகளில், கிணார், படாளம் நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளடங்கி உள்ளன. இவை, தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது.இதனால், கடந்த ஒரு மாதமாக கொள்முதல் நிலையத்தில், நெல்லை கொட்டி பாதுகாத்து வரும், சிறு விவசாயிகள் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.