இரவில் சாலையோரம் கொட்டும் ரசாயன கழிவால் அபாயம்
சூணாம்பேடு,சூணாம்பேடு பகுதியில் மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு இடையே செல்லும் 37 கி.மீ., துார மாநில நெடுஞ்சாலை உள்ளது.வெண்ணாங்குப்பட்டு, சூணாம்பேடு, நுகும்பல், சித்தாமூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மதுராந்தகம், மரக்காணம், புதுச்சேரி போன்ற பகுதிகளுக்குச் செல்ல, இந்த சாலையைப் பயன்படுத்துகின்றனர்.தினமும் சாலையில் இருசக்கர வாகனம், கார், தனியார் மற்றும் அரசு பேருந்து என, ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.இந்நிலையில் சூணாம்பேடு - வெண்ணாங்குப்பட்டு இடையே உள்ள சாலையில், இரவு நேரத்தில் போக்குவரத்து இல்லாத பகுதிகளில், 'டேங்கர் லாரி'கள் வாயிலாக, வேதியியல் கழிவுகள் கொண்டு வந்து சாலை ஓரத்தில் வெளியேற்றப்பட்டு வருகின்றன.குறிப்பாக சூணாம்பேடு காலனி குளக்கரை, வில்லிப்பாக்கம் மயானம், தாங்கல் காட்டுப்பகுதி, தாமரைகேணி விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல இடங்களில், மர்ம நபர்கள் இரவு நேரத்தில் வேதியியல் கழிவுகளை கொண்டு வந்து வெளியேற்றிவிட்டுச் செல்கின்றனர்.இந்த வேதியியல் கழிவுகள் வெளியேற்றப்பட்ட இடங்களில், நெடியுடன் கூடிய துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சாலை ஓரத்தில் உள்ள செடிகளும் கருகி விடுகின்றன.இந்த வேதியியல் கழிவால் நிலம், காற்று மற்றும் நிலத்தடி நீர் மாசடைகிறது.எனவே மாவட்ட நிர்வாகம், இரவு நேரத்தில் வேதியியல் கழிவை வெளியேற்றும் மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.