| ADDED : ஜூலை 26, 2024 02:33 AM
கூடுவாஞ்சேரி:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, 28வது வார்டுக்கு உட்பட்ட குமரன் நகர் பகுதியில், தொடர்ச்சியாக குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது.அப்பிரச்னையை தீர்க்க அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி வந்தனர். அதன் அடிப்படையில், ஆறாவது நிதிக்குழுவின் பரிந்துரையின்படி, 1.50 கோடி ரூபாய் திட்ட மதிப்பில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க, பூமி பூஜை நடந்தது.இதில், நகராட்சி தலைவர் கார்த்திக், துணைத் தலைவர் லோகநாதன், நகராட்சி பொறியாளர் வெங்கடேசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.நகராட்சி தலைவர் கார்த்திக் கூறியதாவது:கூடுவாஞ்சேரி நகராட்சி பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக, ஆறாவது நிதிக்குழு பரிந்துரையின்படி, 1.50 கோடி ரூபாய் மதிப்பில், மூன்று இடங்களில் நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டும் பணி துவங்கப்பட்டு உள்ளது.இந்த பணிகள், இன்னும் மூன்று மாத காலங்களில் நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். மேலும், கடந்த நகரசபை கூட்டத்தில், எந்த பணிகளும் நடக்கவில்லை என, என் மீது புகார் கூறி வெளிநடப்பு செய்த, அ.தி.மு.க., கவுன்சிலர் வார்டுகளில் தான் இந்த பணிகள் நடக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.