உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் போதை ஆசாமிகள் அட்டூழியம்

கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் போதை ஆசாமிகள் அட்டூழியம்

கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திலிருந்து, செங்கல்பட்டு, வண்டலுார், தாம்பரம், கேளம்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, தினமும் 80க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இந்த பேருந்து நிலையத்தை, பெருமாட்டுநல்லுார், காயரம்பேடு, குமுழி, மாடம்பாக்கம், ஆதனுார் உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.மேலும், பள்ளி செல்லும் மாணவர்கள் அதிகமாக வருகின்றனர். இந்த பேருந்து நிலையத்தில், பயணியருக்கான இருக்கை மற்றும் கழிப்பறை வசதி உள்ளது.இங்கு உள்ள பயணியர் இருக்கைகளை பயணியர் பயன்படுத்த முடியாமல், பகல் வேளையிலேயே போதை ஆசாமிகள் ஆக்கிரமித்து, மது அருந்துவதுடன், அங்கேயே படுத்துறங்குகின்றனர்.மேலும் ஆதரவற்றோரும் அங்கு நிரந்தரமாக தங்கியுள்ளதால், அவர்கள் பேருந்து நிலைய வளாகத்திலேயே சிறுநீர், மலம் கழிக்கின்றனர். அதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது.இது குறித்து, ஒரு பயணி கூறியதாவது:கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் உள்ள இருக்கைகளை, பயணியர் பயன்படுத்த முடியவில்லை. மேலும், பேருந்து நிலையத்திலேயே தங்கியுள்ள ஆதரவற்றோர், ஆங்காங்கே சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதால், வளாகம் முழுதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பேருந்து நிலைய வளாகத்திற்குள், தனியார் பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றின் இடையில் நின்று, போதை ஆசாமிகள் மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.எனவே, பேருந்து நிலைய வளாகத்திற்குள், தனியார் வாகனங்களை கட்டுப்படுத்துவதுடன், திறந்தவெளி மதுக்கூடமாக பயன்படுத்தி வரும் போதை ஆசாமிகளை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ