உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதிய வேளாண் விரிவாக்க மைய கட்டடம் பவுஞ்சூரில் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

புதிய வேளாண் விரிவாக்க மைய கட்டடம் பவுஞ்சூரில் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

பவுஞ்சூர்: பவுஞ்சூர் வட்டார வேளாண் துறை கட்டுப்பாட்டின் கீழ் அம்மனுார், செங்காட்டூர், கொடூர், முகையூர், தொண்டமநல்லுார் உட்பட 41 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது.இப்பகுதிகளில், 10,000 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது. வேர் கடலை, கேழ்வரகு, தர்ப்பூசணி உள்ளிட்டவை குறிப்பிட்ட பருவத்தில் பயிரிடப்படுகின்றன.பவுஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் செயல்படும் விரிவாக்க மையம் வாயிலாக விவசாயிகளுக்கு, வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் விவசாய கருவிகள், உரம், விதை உள்ளிட்ட இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.தற்போது செயல்படும் வேளாண் விரிவாக்க மைய கட்டடம், 1968ம் ஆண்டு கட்டப்பட்டது. நாளடைவில் பழுதடைந்து, மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகுகிறது. இதனால், அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள உரம், விதை உள்ளிட்ட இடுபொருட்கள் மற்றும் கோப்புகள் சேதமடைகின்றன.மேலும், பயிற்சி கூடம் இல்லாததால், விவசாயிகளுக்கு பயிற்சி வழங்க வேளாண் துறை அதிகாரிகள் மாற்று இடத்தை தேடி அலைய வேண்டிய நிலை உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வேளாண், தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை என, அனைத்து விவசாய துறைகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த புதிய வேளாண் விரிவாக்க மைய கட்டடம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான கட்டடத்தில், பவுஞ்சூர் வட்டார வேளாண் துறை செயல்பட்டு வருகிறது. போதிய இடவசதி இல்லாமல் விவசாயிகள் மற்றும் வேளாண் அதிகாரிகள் சிரமப்படுகின்றனர்.இதை தொடர்ந்து, அரசு சார்பில் புதிய ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.தற்போது செயல்படும் வட்டார வேளாண் துறை அலுவலகம் உள்ள 50 சென்ட் இடம் மேய்க்கால் புறம்போக்கு வகைபாட்டை சேர்ந்தது என்பதால், கட்டட அனுமதி பெறுவதில் சிக்கல் உள்ளது.அதற்கு பதிலாக, பெரியவெளிக்காடு கிராமத்தில், அரசுக்கு சொந்தமான 50 சென்ட் இடத்தை, மேய்க்கால் புறம்போக்கு இடமாக மாற்றும் பணி நடக்கிறது.அதேபோல், வட்டார வேளாண் துறை அலுவலகம் உள்ள மேய்க்கால் புறம்போக்கு இடத்தை, அரசுக்கு சொந்தமான இடமாக மாற்றி கட்டட அனுமதி பெறும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை