செங்கல்பட்டு:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் ஊராட்சி கரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 39. இவருக்கு, திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் இருந்து வடக்குப்பட்டு - குருவன்மேடு சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது, தரைப்பாலம் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கினார்.அந்த விபத்தில், சத்தியமூர்த்திக்கு முதுகுதண்டில் பாதிப்பு ஏற்பட்டு, கால்கள் நடக்க முடியாமல் போனது. மனைவி, தன் தாயார் வீட்டிற்கு சென்று விட, சத்தியமூர்த்தி ஆதரவுக்கு யாருமின்றி வறுமையில் வாடினார். இந்நிலையில், கடந்த 27ம் தேதி, சத்தியமூர்த்தி வாட்ஸாப் வாயிலாக செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜை தொடர்பு கொண்டு, தனது நிலை குறித்தும் கூறினார்.அதன் அடிப்படையில், செங்கல்பட்டு சார்பு ஆட்சியர் நாராயணசர்மா மேற்பார்வையில் விசாரணை செய்யப்பட்டு, நேற்று மதியம் கலெக்டர் அருண்ராஜ் சத்தியமூர்த்தி வசித்த குடிசைக்கு நேரில் சென்று நலம் விசாரித்து, இலவச வீட்டுமனை பட்டா மற்றும் சமையல் செய்ய மின்சார அடுப்பு, பாத்திரங்கள் வழங்கினார்.தொடர்ந்து, இரண்டு மாதங்களில் ஊரக வளர்ச்சி துறை வாயிலாக வீடு காட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.இந்த நிகழ்வின் போது, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள், வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.