உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருக்கழுக்குன்றத்தில் குடியேற்றம் அதிகரிப்பு நகராட்சியாக தரம் உயர்த்த வலியுறுத்தல்

திருக்கழுக்குன்றத்தில் குடியேற்றம் அதிகரிப்பு நகராட்சியாக தரம் உயர்த்த வலியுறுத்தல்

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.திருக்கழுக்குன்றம் பேரூராட்சியானது திருக்கழுக்குன்றம், ருத்திரான்கோவில், முத்திகைநல்லான்குப்பம், மங்கலம், நாவலுார் ஆகிய பகுதிகள் 18 வார்டுகளுடன் உள்ளது.இந்த உள்ளாட்சி நிர்வாகம், கடந்த 1899ல் ஏற்படுத்தப்பட்டு, தற்போது சிறப்புநிலை பேரூராட்சியாக உள்ளது. 35,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இவ்வூர் தாலுகா, வட்டார வளர்ச்சி ஆகிய நிர்வாகங்களின் தலைமையிடமாக உள்ளது. சார் - பதிவாளர் அலுவலகம், பொதுப்பணி, நெடுஞ்சாலை, வேளாண்மை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், பொதுத்துறை, தனியார் வங்கிகள், அரசு மருத்துவமனை, அரசு, தனியார் பள்ளிகள், கல்லுாரிகள் உள்ளிட்டவை இயங்குகின்றன.அரசு நலத்திட்ட சேவைகளுக்காக, தினசரி ஏராளமானோர் இங்குள்ள அரசு அலுவலகங்களுக்கு வருகின்றனர்.ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில், ஆன்மிக சிறப்பு வாய்ந்தது. பவுர்ணமியன்று பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். மாவட்ட தலைநகர் செங்கல்பட்டிலிருந்து, 14 கி.மீ., தொலைவில் உள்ள இங்கு மக்கள் குடியேற்றம் அதிகரித்து, இங்குள்ள வசிப்பிட பகுதிகள் விரிவடைந்து, நகர்ப்புற பகுதியாக வளர்ச்சியடைகிறது.இப்பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த கருதி, பல ஆண்டுகளுக்கு முன்பே, மன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசிடம் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சி, சில ஆண்டுகளுக்கு முன், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, தற்போது மாமல்லபுரம் பேரூராட்சியும் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. திருக்கழுக்குன்றம் பேரூராட்சியையும் நகராட்சியாக தரம் உயர்த்த அரசு பரிசீலித்த நிலையில், அதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இப்பகுதி மேம்பாடு, நலத்திட்டங்கள் செயல்பாடு கருதி, நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை