ரயில் நிலைய பணிக்கு இடையூறு டூ- - வீலர்களை அகற்ற வலியுறுத்தல்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மற்றும் அதனைச்சுற்றி உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள், அரசு மற்றும் தனியார் வேலைக்கு செல்வோர், அத்தியாவசிய பணி உள்ளிட்ட பல்வேறு தேவைக்கு, மின்சார ரயில் மற்றும் விரைவு ரயில்களில் தினமும் சென்று வருகின்றனர்.செங்கல்பட்டு மணிக்கூண்டு பகுதியிலிருந்து, ரயில் நிலையத்திற்கு ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் வருகின்றனர். இவர்கள், ரயில் நிலைய வளாக சாலையை ஆக்கிரமித்து, சாலையின் இருபுறமும், தங்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். மாலை பணிமுடித்து வந்து, வாகனங்களை எடுத்துச் செல்கின்றனர்.இதனால், ரயில் நிலைய கட்டுமான பணிக்கு பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மற்றும் தபால் நிலையம், ரயில் நிலையத்திற்கு செல்லும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு இடையூறு ஆற்படுகிறது.ஆம்புலன்ஸ் வாகனங்கள் அவசர காலங்களில் செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே, சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த, ரயில்வே பாதுகாப்பு படை, நகர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.