சென்னை:கிண்டி பாம்பு பண்ணையில், வன உயிரினங்களை அருகில் இருந்து தொட்டு பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்த, '3டி' தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.கிண்டியில் உள்ள பாம்பு பண்ணை, ஒரு ஏக்கர் பரப்பு கொண்டது. கடந்த 1972ல் இந்தியாவில் முதல் முறையாக துவக்கப்பட்ட பாம்பு பண்ணை என்ற பெருமை இதற்கு உள்ளது.இங்கு, பாம்பு, முதலை, பச்சோந்தி, ஓணான், உடும்பு உட்பட 32 வகையான, 300க்கும் மேற்பட்ட ஊர்வன வகைகளைச் சேர்ந்த வன உயிரினங்கள் உள்ளன.இங்குள்ள, 40 வயதுள்ள உப்புநீர் முதலை, 25 வயதுள்ள தெற்காசிய மலைப்பாம்பு, பார்வையாளர்களை மிகவும் கவர்ந்து வருகிறது. இதில், தெற்காசிய மலைப்பாம்பு மூன்று முறை, தலா 40 முட்டைகள் வீதம் இட்டு, குஞ்சு பொரித்துள்ளது.அதுமட்டுமல்லாமல், பாம்புகள் குறித்து அறிந்து கொள்ள புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளன. விரைவில் 'அனகோண்டா'
இதைத்தொடர்ந்து, அனகோண்டா வகை பாம்பை பார்வைக்கு வைக்க, நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, தனி கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. தேசிய வன உயிரின ஆணையத்தின் அனுமதிக்காக நிர்வாகம் காத்திருக்கிறது.இந்த நிலையில், வன உயிரினங்களை தொடும் உணர்வை ஏற்படுத்தும், '3டி' தொழில்நுட்ப காட்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதில், வி.ஆர்., எனும் 3டி 'விர்ச்சுவல்' ரியாலிட்டி ஷோ, டைனோசர் உலகம், நீருக்கடியில் உலகம், வனப்பகுதி உலகம் உள்ளிட்ட காட்சிகளை கொண்டது.இதில் ஒரு காட்சியை தேர்வு செய்து கொள்ளலாம். ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வரை காட்சிப்படுத்தப்படும். இதற்கு, 100 ரூபாய் கட்டணம்.மேலும், ஏ.ஆர்., எனும் 3டி 'அகிமெண்டட் ரியாலிட்டி ஷோ, வன உயிரினங்களை அருகில் நின்று பார்ப்பது போன்றும், அவை நம்மை சீண்டுவது போன்று காட்சி வடிவமைக்கப்பட்டு உள்ளது. 10 நிமிடம் ஓடும் காட்சிக்கு, 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இந்த காட்சிகள் குழந்தைகளை குதுாகலப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.கிண்டி பாம்பு பண்ணை இயக்குனர் ராஜரத்தினம், இணை இயக்குனர் அறிவழகன் கூறியதாவது: பாடத்திட்டத்தில் படமாக இருந்தாலும், வன உயிரினங்களை நேரில் பார்த்து தெரிந்து கொள்ளும் ஆர்வம், இன்றைய மாணவ - மாணவியரிடம் அதிகரித்துள்ளது. 3டி தொழில்நுட்பம்
ஆராய்ச்சி சார்ந்து படிப்பவர்களும் வருகின்றனர். இங்குள்ள, சில ஓணான்களை கொடுத்து விட்டு, அனகோண்டா வாங்கி பரிமாற்றம் செய்ய உள்ளோம். தற்போது, 3டி தொழில்நுட்பத்தில் காட்சிகள் அறிமுகப்படுத்தியுள்ளோம். இது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
என்னென்ன உள்ளன?
*கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், விஷம் கக்கும் பாம்பு, சாரை, நல்லபாம்பு, மலைப்பாம்பு, பச்சை பாம்பு, தண்ணீர் பாம்பு - 125*சதுப்புநில முதலை, கங்கை முதலை, உப்புநீர் முதலை மற்றும் வெளிநாட்டு முதலைகள் - 25*பாலாமை, குளத்தாமை, நட்சத்திர ஆமைகள் மற்றும் வெளிநாட்டு ஆமைகள் - 50* ஓணான் வகைகள் - 21*பச்சோந்தி - 5*உடும்பு - -2
நுழைவுக் கட்டணம்
பெரியவர்கள் ரூ.30சிறியவர்கள் ரூ.10புகைப்படம் எடுக்க ரூ.20வீடியோ எடுக்க ரூ.100காலை 9:00 முதல் மாலை 5:30 மணி வரை கண்டுகளிக்கலாம்.குறிப்பு: செவ்வாய்க்கிழமை விடுமுறை.