| ADDED : மே 19, 2024 07:05 AM
சென்னை : மாநகர போக்குவரத்து கழகத்தில், 12 மணி நேரம் வேலை புகாரை தொடர்ந்து, பணிமனையில் தொழிலாளர் துறை ஆய்வு மேற்கொண்டது.மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 600க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 3,200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மொத்தம் 15,000க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பணியாற்றி வருகின்றனர்.தொழிலாளர்கள் எட்டு மணி நேரம், 16 மணி நேரம் முறையில் பணிபுரிகின்றனர். 8 மணி நேர பணிக்கு ஒரு வருகை பதிவும், 16 மணி நேர பணிக்கு இரண்டு வருகை பதிவும் வழங்கப்படுகிறது. மாநகர போக்குவரத்து கழகத்தில் 140க்கும் மேற்பட்ட பேருந்து வழித்தடங்களில் 12 மணி நேர வேலை வழங்கப்படுகிறது.இது மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக இருப்பதால் இந்த நடைமுறையைக் கைவிட வேண்டும் என சி.ஐ.டி.யு., சார்பில் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனரிடம் வலியுறுத்தப்பட்டது.இதில் நடவடிக்கை இல்லாத நிலையில், சரக வாரியாக தொழிலாளர் ஆய்வாளர்களிடம் சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் புகார் அளித்தனர். இதையடுத்து, பெரம்பூர், அயனாவரம் உள்ளிட்ட பணிமனைகளில் தொழிலாளர் ஆய்வாளர் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களிடம் கருத்துக்களையும் கேட்டறிந்துள்ளார்.தொடர்ந்து, பல்வேறு பணிமனைகளிலும் ஆய்வு நடத்தி, விரைவில் சி.ஐ.டி.யு., அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.