அரசு மருத்துவமனையில் சிகிச்சை வார்டு விபரத்துடன் துண்டு பிரசுரம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், புறநோயாளிகள் பிரிவுகளில் சிகிச்சை அளிக்கும் வார்டுகள் விபரம் அடங்கிய துண்டு பிரசுரங்கள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் சிகிச்சைக்கு வருகின்றனர்.இங்கு வரும் புறநோயாளிகள், எந்த வார்டுகளில் எந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது எனத் தெரியாமல் அலைந்தனர்.இதையடுத்து, புறநோயாளிகள் பிரிவுகளில் சிகிச்சை அளிக்கும் வார்டுகள், பார்வை நாட்கள் குறித்த விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை, மருத்துவமனை முதல்வர் சிவசங்கரன், பார்வையாளர்களுக்கு நேற்று வழங்கினார். இதன்படி, பொதுமக்கள் தேவைப்படும் சிகிச்சையை, அந்தந்த பிரிவுகளில் சென்று பெறலாம் என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.