கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி மேற்கு பகுதியில் உள்ள கன்னியப்பன் நகர், அருள் நகர், கங்கை, யமுனை நகர் பகுதிகளிலும், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி, பிரியா நகர் பிரதான சாலை, பிரியா நகர் விரிவு இரண்டு மற்றும் மூன்று ஆகிய பகுதிகளிலும், சில நாட்களாக, தாழ்வழுத்த மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:சில நாட்களாக, கூடுவாஞ்சேரி மேற்கு பகுதியில் உள்ள கன்னியப்பன் நகர் மற்றும் ஊரப்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட பிரியா நகர் உள்ளிட்ட பகுதிகளில், தொடர்ந்து தாழ்வழுத்த மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதனால், மிக்ஸி, கிரைண்டர் போன்ற அத்தியாவசிய மின் சாதனங்களைக் கூட பயன்படுத்த முடியாமல், சிரமம் அடைந்து வருகிறோம்.மேலும், இரவு நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, துாக்கமின்றி தவிக்கிறோம். எனவே, எங்கள் பகுதிக்கு சீரான மின் வினியோகம் கிடைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, கூடுவாஞ்சேரி உதவி செயற்பொறியாளர் சசிகுமார் கூறியதாவது:கூடுவாஞ்சேரி மற்றும் ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, மறைமலை நகர் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து, 33 கே.வி., திறன் கொண்ட மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது.இவ்வாறு வரும் சப்ளையை, கூடுவாஞ்சேரியில் இருந்து மின்மாற்றி வாயிலாக அனுப்பி, வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.காட்டாங்கொளத்துார் பகுதியில், நேற்று முன்தினம் பெய்த மழை மற்றும் காற்றால், மின் கம்பிகள் சேதம் அடைந்தன. தற்போது, அவற்றை பழுது பார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.அதன் காரணமாக, இப்பகுதிக்கு தாழ்வழுத்த மின் வினியோகம் செய்யப்பட்டது. விரைவில், பணிகள் சீரமைக்கப்பட்டு, சீரான மின் வினியோகம் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.