ஓட்டேரி காவல் நிலையத்திற்கு ரூ.2 கோடியில் புதிய கட்டடம்
வண்டலுார்:வண்டலுார் எல்லைக்கு உட்பட்ட ஓட்டேரி காவல் நிலையத்திற்கு, புதிய கட்டடம் கட்டும் பணி வேகமெடுத்து உள்ளது.தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட வண்டலுார், ஓட்டேரி காவல் நிலையம், தற்போது மண்ணிவாக்கம் - வாலாஜாபாத் சாலையில் இயங்கி வருகிறது.இங்கு, சட்டம் - ஒழுங்கு மற்றும் குற்றப் பிரிவுக்கான காவல் நிலையங்கள் அடுத்தடுத்து தனி கட்டடங்களில் இயங்கி வருகின்றன. போதிய இடவசதி இல்லாததால், போக்குவரத்து பிரிவுக்கான அலுவலகம், பீர்க்கன்கரணையில் இயங்கி வருகிறது.இந்நிலையில், சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து என, மூன்று பிரிவு காவல் நிலையங்களும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில், புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கான கட்டுமான பணிகள், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆறு மாதங்களுக்கு முன் துவங்கின. தற்போது 60 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில், மற்ற பணிகள் வேகமெடுத்து உள்ளன.இதுகுறித்து, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஓட்டேரி காவல் நிலையத்திற்கான புதிய கட்டடம், மண்ணிவாக்கம் - வாலாஜாபாத் சாலை மற்றும் வெளிவட்டச் சாலை இணையும் இடத்தில், சர்வே எண் 277ல், இரண்டு தளங்களுடன், 4,000 சதுர அடி பரப்பில், நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த விசாலமான 'பார்க்கிங்' பகுதி உண்டு. தவிர, மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்லும்படி, சாய்வு தளங்களுடன் இந்த கட்டடம் உருவாக்கப்பட்டு வருகிறது.கட்டுமான பணிகளில் 60 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. மீதி பணிகளை விரைந்து முடிக்க, பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.