| ADDED : ஜூன் 29, 2024 12:18 AM
சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ., 400 கோடி ரூபாயில் புதிய புறநகர் பேருந்து முனையத்தை கட்டியது.கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து, இந்த முனையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து, சென்னையின் பல பகுதிகளுக்கு வந்து செல்ல, மாநகர பேருந்து வசதி மட்டுமே பிரதானமாக உள்ளது. ரயில் போக்குவரத்திற்காக, பேருந்து முனையம் எதிரே புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.இவற்றின் இடையே, ஜி.எஸ்.டி., மற்றும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இவற்றை கடக்கும்போது பயணியர் விபத்தில் சிக்கும் அபாயம் இருக்கிறது.எனவே, பயணியர் எளிதாக சாலையை கடக்கவும், பேருந்து முனையம் - ரயில் நிலையத்தை இணைக்கவும் வசதியாக, 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம் அமைக்கப்பட உள்ளது.இத்திட்டத்திற்கு தேவைப்படும் 5,900 சதுர அடி தனியார் நிறுவன புன்செய் நிலத்தை கையகப்படுத்த உள்ளதாக, செங்கல்பட்டு மாவட்ட வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.நிலம் கையகப்படுத்துதலால், மறுவாழ்வு, மறுகுடியமர்வு நடைமுறைகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.- நமது நிருபர் -