சென்னையில் மீண்டும் ராட்சத பேனர்கள் கல்லா கட்டும் அதிகாரிகளால் உயிர்பலி அபாயம்
சென்னை, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சமீப காலமாக தனியார் நிறுவனங்கள் சார்பில் உரிய அனுமதியின்றி தெருக்கள், சாலைகள், மின் கம்பங்கள் மற்றும் கட்டடங்கள் மீது அனுமதியின்றி விளம்பர பேனர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தாமலும், உரிய அனுமதியின்றியும், அதிகாரிகளை தங்களது பண பலத்தால் விலைக்கு வாங்கி, தனியார் நிறுவனத்தினர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆங்காங்கே விளம்பர பேனர்களை அமைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கடந்த 2019ல், சுபஸ்ரீ என்ற இளம் பொறியாளரை, அ.தி.மு.க.,வினர் வைத்த பேனர், உயிர்பலி வாங்கியது குறிப்பிடத்தக்கது.இச்சம்பவத்தை தொடர்ந்து, விளம்பர பேனர்கள் மற்றும் பதாகைகள் அகற்றப்பட்டன. மேலும், உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் விளம்பர பதாகைகளுக்கு தடைவிதித்தது.சில ஆண்டுகளாக, 'கப்சிப்'பாக இருந்த அரசியல் கட்சியினர் மற்றும் தனியார் நிறுவனங்கள், மீண்டும் தலைதுாக்க துவங்க, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், பேனர் கலாசாரம் புற்றீசல் போல அதிகரித்து வருகிறது.இதில், மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர பேனர்கள், பதாகைகள், பலத்த காற்று வீசும்போது பறந்து சென்று, சாலைகளில் நடந்து செல்வோர், வாகன ஓட்டிகள் மேல் விழும் நிலை உள்ளது.அவற்றை அகற்ற வலியுறுத்தி, பலமுறை மாநகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவ்வாறு புகார் தெரிவிக்கும் போதெல்லாம், அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பேனர்களை அகற்றுவது போல் அகற்றி, நடவடிக்கை எடுத்ததாக அதிகாரிகளும் காட்டிக்கொள்கின்றனர். ஆனால் மீண்டும் பேனர்கள் அவ்விடங்களிலேயே, பிரமாண்டமாக வைக்கப்படுகின்றன.ஏற்கனவே, தேனாம்பேட்டை மண்டலத்தில் பணியாற்றிய மாநகராட்சி வருவாய் துறை அலுவலர் ஒருவர், இது தொடர்பாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதன் வாயிலாக, அவர் பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதும் அம்பலமானது. இதையடுத்து, துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், விசாரணை நடைபெற்று வருகிறது.இந்நிலையில், மேலும் ஒரு மாநகராட்சி வருவாய் அலுவலர் உரிய அனுமதி பெறாமலும், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 'டேமேஜ் கட்டணம்' செலுத்தாத தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி, கல்லா கட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.மேலும், விளம்பர பேனர்கள் வைப்பவர்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்து, நல்ல வருமானம் பார்த்து வருகிறார்.இதுகுறித்து, மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் உண்மைத் தன்மையை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.மீண்டும் ஒரு விபத்து, உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, வீதிமீறும் அதிகாரிகளை கண்டறிந்து, களையெடுக்க முதல்வர் முன்வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.