உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நெடுஞ்சாலை வடிகால்வாய் பணிகளை பருவ மழைக்கு முன் முடிக்க உத்தரவு

நெடுஞ்சாலை வடிகால்வாய் பணிகளை பருவ மழைக்கு முன் முடிக்க உத்தரவு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், நெடுஞ்சாலைத் துறை சாலை ஓரங்களில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கட்டுமான பணிகளை, வடகிழக்கு பருவமழைக்கு முன் முடிக்க வேண்டும் என, நெடுன்சாலைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.சென்னை அடையாறு மத்திய கைலாஷ் முதல் மாமல்லபுரம் பூஞ்சேரி வரை, 42 கி.மீ., ராஜிவ்காந்தி சாலை உள்ளது. இத்தடத்தில், சென்னையை ஓட்டிய திருப்போரூர், சிறுசேரி, கேளம்பாக்கம், படூர் உள்ளிட்ட பகுதிகள் அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன. தனியார் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் அதிகரிப்பதால், அப்பகுதிகளில் போக்குவரத்துக்கான வசதிகளை எளிமைப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.இச்சாலையில், அரசு மற்றும் தனியார் நிறுவன பேருந்துகள், டாரஸ் லாரிகள் உட்பட, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.திருப்போரூர், சிறுசேரி, கேளம்பாக்கம், படூர் உள்ளிட்ட பகுதிகளில், கன மழையின்போது சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அத்தியாவசிய பணி, மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இச்சாலையில், மழைநீர் கால்வாய் கட்ட வேண்டும் என, நெடுஞ்சாலைத் துறை மற்றும் அரசிடம், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இதைத் தொடர்ந்து, சிறுசேரி - படூர், கேளம்பாக்கம், திருப்போரூர், காலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், சாலையில் 4,600 மீட்டர் தொலைவுக்கு மழைநீர் கால்வாய் கட்டுவதற்கு, 12.30 கோடி ரூபாயை, அரசு கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்தது. இப்பணிக்கு டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் பணிகளை செய்து வருகின்றனர். தற்போது, மழைநீர் கால்வாய் கட்டுமானப் பணி, 75 சதவீதம் முடிந்துள்ளது. திருப்போரூர், காலவாக்கம், படூர் பகுதிகளில், மழைநீர் கல்வாய் கட்டும் பணிக்கு, மின் கம்பங்கள் இடையூறாக உள்ளன.இந்த கம்பங்களை மின் வாரிய அதிகாரிகள் அகற்றிக் கொடுத்தால், பணிகள் தீவிரமாக முடிக்கப்படும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.எச்சூர் - திருப்போரூர் வரையிலான 14 கி.மீ., சாலையில், 4 கி.மீ., சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த 25 ஆண்டுகளுக்கு பின், சாலை அமைக்க வனத்துறை கடந்த ஆண்டு அனுமதி அளித்தது.அங்கு, சாலை மற்றும் சிறுபாலம் அமைக்க, 29 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்தது. இப்பணிக்கு டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.இதில், 7 கி.மீ., வரை தார் சாலையும், 22 சிறுபாலங்களில், 18 சிறுபாலங்கள் பணிகளும் நிறைவுபெற்றன. மற்ற சிறுபாலப் பணி மற்றும் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.சூணாம்பேடு - பெரும்பேர்கண்டிகை இடையே, 5 கி.மீ., தொலைவுக்கு சாலை அமைக்க, 6.9 கோடி ரூபாய் நிதியை, அரசு ஒதுக்கீடு செய்தது. இப்பகுதியிலும், சாலை அமைக்கும் நடந்து வருகின்றன.மேற்கண்ட பணிகளை, வடகிழக்கு பருவ மழைக்கு முன் முடிக்க வேண்டும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு, நெடுஞ்சாலைத் துறை செயலர் செல்வராஜ், தலைமை பொறியாளர் சத்தியபிரகாஷ் ஆகியோர் உத்தரவிட்டனர்.மழைநீர் கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணிகளை, வரும் அக்., மாத்திற்குள் முடிக்க வேண்டும் என, தனியார் ஒப்பந்ததாரர்களிடம் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பணிகள் இன்னும் நடந்து வருவதால், வரும் செப்., மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பட்டிற்கு கொண்டுவரப்படும்.- நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்,செங்கல்பட்டு மாவட்டம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை