உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை நகரில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற... உத்தரவு போக்குவரத்து முடங்குவதால் அதிரடி நடவடிக்கை

செங்கை நகரில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற... உத்தரவு போக்குவரத்து முடங்குவதால் அதிரடி நடவடிக்கை

செங்கல்பட்டு :செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் முதல் நீதிமன்றம் வரை, ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.செங்கல்பட்டு நகரில், மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லுாரி, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வங்கிகள், ரயில் நிலையம், மின்மேற்பார்வை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.மேலும், தனியார் மருத்துவமனைகள், தனியார் துணிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் இயங்குகின்றன.இதனால், தினமும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள், செங்கல்பட்டிற்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் முதல், ஒருங்கிணைந்த நீதிமன்றம் வரை, 3 கி.மீ., துாரமுள்ள ஜி.எஸ்.டி., சாலையை ஆக்கிரமித்து, அதிக அளவில் கடைகள் வைக்கப்பட்டு உள்ளன.

கூடுதல் நெரிசல்

இதேபோன்று, காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை, ராஜாஜி தெரு, அண்ணா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டு உள்ளன.அத்துடன், பல இடங்களில் வாகனங்களில் காய்கறி, பழம், மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் சாலையை ஆக்கிரமிக்கின்றன.இதனால், மேற்கண்ட சாலைகளில் வாகனங்கள் செல்லும் போது, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது, ஜி.எஸ்.டி., சாலையில், தள்ளுவண்டி கடைகள் மற்றும் பிரியாணி கடைகள் அதிகரித்து உள்ளன. இதனாலும், கூடுதல் நெரிசல் ஏற்படுகிறது.இதை தடுக்க வேண்டிய நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கும் போதே, அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலரின் ஆதரவோடும், பல ஆக்கிரமிப்பு கடைகள் செயல்பட்டு வருகின்றன.இதனால், தினமும் எல்லா நேரத்திலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பள்ளி கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

குறும்படம்

இதையடுத்து நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என, தமிழக முதல்வர் மற்றும் கலெக்டரிடம், சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தனர்.இதைத்தொடர்ந்து, கடந்த 24ம் தேதி, சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் செங்கல்பட்டில் நடந்தது. இந்த கூட்டத்தில், போக்குவரத்து போலீசார், செங்கல்பட்டு நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்து, குறும்படம் வெளியிட்டனர்.இதில், பழைய பேருந்து நிலையம் முதல் நீதிமன்றம் வரை, சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளால், போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதாக கூறியுள்ளனர்.இதையடுத்து வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி நிர்வாகம், போலீசார் ஆகியோர் இணைந்து, செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் முதல் நீதிமன்றம் வரை, ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டு உள்ளார்.இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள், செங்கல்பட்டிற்கு முதல்வர் வருவதற்குள் செயல்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் முதல் நீதிமன்றம் வரை, ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, வருவாய்த் துறை அதிகாரிகள் அளவீடு செய்து கொடுக்க வேண்டும். அதன் பிறகு, மேற்கண்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.- நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்,செங்கல்பட்டு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை