திருக்கச்சூர் பகுதியில் பஸ் நிறுத்தம் அமைக்க பயணியர் வேண்டுகோள்
மறைமலைநகர், மறைமலைநகர் நகராட்சி 19வது வார்டு திருக்கச்சூர் பகுதியில், 6,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இவர்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின் றனர்.மேலும் ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தினமும் பணிக்கு சென்று வருகின்றனர்.இந்த பகுதியில் உள்ள சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில் செங்கல்பட்டு -- திருவள்ளூர் மார்க்கமாக தடம் எண் '82சி' விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து இயக்கப்படுகிறது.இந்த பகுதியில் பேருந்து நிறுத்தம் இல்லாததால், 1 கி.மீ., துாரத்தில் உள்ள தெள்ளிமேடு அல்லது சிங்கபெருமாள்கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, நடந்து வரும் சூழல் உள்ளது. எனவே, திருக்கச்சூர் பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டுமென, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து திருக்கச்சூர் பகுதிவாசிகள் கூறியதாவது:திருக்கச்சூரில் இருந்து 100க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் சிங்கபெருமாள்கோவில், செங்கல்பட்டு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.திருக்கச்சூர் கூட்டு சாலையில் இருந்த பேருந்து நிழற்குடை, இச்சாலை ஆறு வழிச்சாலையாக 10 ஆண்டுகளுக்கு முன் அகலப்படுத்தும் போது அகற்றப்பட்டது.இங்கு மீண்டும் பேருந்து நிறுத்தம் அமைக்கப்படாததால், மக்கள் நீண்ட துாரம் நடந்து வர வேண்டும் அல்லது ஷேர் ஆட்டோக்களுக்கு அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.எனவே, திருக்கச்சூர் பகுதியில் மீண்டும் பேருந்து நிறுத்தம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து 19வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் ஜெயந்தி கூறுகையில்,''திருக்கச்சூர் கூட்டு சாலை பகுதியில் புதிதாக பேருந்து நிறுத்தம் மற்றும் நிழற்குடை அமைக்க வேண்டும் என, அமைச்சர் அன்பரசனிடம் சமீபத்தில் கோரிக்கை மனு அளித்து உள்ளோம்,'' என்றார்.