உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஜி.எஸ்.டி., - இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆரில் விதிமீறிய வாகனங்களுக்கு அபராதம்

ஜி.எஸ்.டி., - இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆரில் விதிமீறிய வாகனங்களுக்கு அபராதம்

தாம்பரம்,:தாம்பரத்தில், காந்தி சாலை சிக்னல் முதல் சானடோரியம் மெப்ஸ் சிக்னல் வரை, ஜி.எஸ்.டி., சாலையின் கிழக்கு பகுதியில், 'ஒர்க் ஷாப்' மற்றும் வாகன உதிரி பாக விற்பனை கடைகள், இரண்டு 'டாஸ்மாக்' கடைகள் இயங்கி வருகின்றன.இவற்றுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் கடைகாரர்கள், தங்கள் வாகனங்களை ஜி.எஸ்.டி., சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து நிறுத்தி வருகின்றனர். தவிர, நடைபாதையும் ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.வரிசைகட்டி நிறுத்தப்படும் வாகனங்களால், 'பீக் ஹவர்' நேரத்தில், தாம்பரம் முதல் மெப்ஸ் சிக்னல் வரை, கடும் நெரிசல் ஏற்படுகிறது; அடிக்கடி விபத்தும் நடக்கிறது. வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதியடைகின்றனர்.இது குறித்து தொடர்ந்து புகார் சென்ற நிலையில், தாம்பரம் போக்குவரத்து போலீசார் நேற்று, நடவடிக்கையில் ஈடுபட்டனர்.பல நாட்களாக சாலையிலே நிறுத்தப்பட்டிருந்த 20 வாகனங்களுக்கு 30,000 ரூபாய் அபராதம் விதித்தனர். தவிர, சாலை, நடைபாதை ஆக்கிரமித்து வைத்திருந்த பெயர் மற்றும் விளம்பர பலகைகளையும் அகற்றினர். சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தக்கூடாது. மீறினால் நடவடிக்கை பாயும் என, கடைகாரர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.

மெட்ரோ ரயில் பணி

ஓ.எம்.ஆரில் டைடல் பார்க் சந்திப்பு முதல் சிறுசேரி வரை மற்றும் மேடவாக்கம் பகுதியில், மெட்ரோ ரயில் பணி நடக்கிறது. இதற்காக, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பணியின் தீவிரத்தை உணர்ந்து, சாலை மற்றும் அணுகு சாலையின் எதிர் திசையில் செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், விதிமீறல், விபத்து நடப்பது அதிகரித்தது.இதையடுத்து, பள்ளிக்கரணை போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீசார், ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., மற்றும் வேளச்சேரி - தாம்பரம் சாலையில் நேற்று முன்தினம், வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.விதிகளை மீறி செல்லும் வாகனங்களை நிறுத்தி, வழக்கு பதிந்து அபராதம் விதித்தனர். ஒரே நாளில் 336 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை