கேளம்பாக்கம் சார்-பதிவாளர் ஆபீசுக்கு சிறுதாவூரை மாற்றுவதை தடுக்க மனு
திருப்போரூர், சிறுதாவூர் கிராமத்தை திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்திலிருந்து, புதிதாக அமைய உள்ள கேளம்பாக்கம்சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு மாற்றம்செய்வதை தடுக்கவேண்டும் எனக் கூறி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசனிடம், ஊராட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுஉள்ளது.மனுவில் கூறியிருப்பதாவது: சிறுதாவூர் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் பத்திரம் பதிவு செய்யவும், பிறப்பு, இறப்பு பதிவு செய்தல், திருமண பதிவு செய்தல் போன்ற பணிகளை, 150 ஆண்டுகளுக்கும் மேலாக, திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் மேற்கொண்டு வருகின்றனர். சிறுதாவூர் கிராமத்தில் இருந்து 3 கி.மீ., துாரத்தில் தான் திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகம் உள்ளது.தற்போது, திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தை பிரித்து, கேளம்பாக்கத்தில் புதிதாக அமைய உள்ள சார்- பதிவாளர் அலுவலகத்திற்கு மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறுதாவூர் கிராமம் கேளம்பாக்கத்தில் சேர்க்கப்பட உள்ளதாக தெரிகிறது. சிறுதாவூரிலிருந்து கேளம்பாக்கம் 15 கி.மீ., துாரத்தில் உள்ளது.சிறுதாவூர் கிராமத்தை கேளம்பாக்கம் சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு மாற்றினால், பொதுமக்களுக்கு வேலை பளு, கால விரயம், வீண் செலவு ஏற்படும் சூழல் உள்ளது. அதுமட்டுமல்லாமல், திருப்போரூரில் தாலுகா அலுவலகம், பி.டி.ஓ.,அலுவலகம், காவல்நிலையம் ஆகியவை இருப்பதால், திருப்போரூரில் சார் - பதிவாளர் அலுவலக பணிகளை முடிக்க ஏதுவாகஇருக்கும்.எனவே, பொதுமக்களின் நலன் கருதி சிறுதாவூர் கிராமத்தை கேளம்பாக்கம் சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு மாற்றம் செய்யாமல், திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்திலேயே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.