பெண்ணுக்கு தொந்தரவு ராயபுரத்தில் பாதிரியார் கைது
ராயபுரம், ராயபுரத்தை சேர்ந்த, 30 வயது பெண், ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2015ல், எங்களது வீட்டில் வாடகைக்கு இருந்த ரகுநாதன் என்ற பாதிரியார் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால், தன் தந்தை அவரை வீட்டை காலி செய்ய சொல்லி அனுப்பிவிட்டார்.பின், நான் கல்லுாரிக்கு செல்லும்போதும், வேலைக்கு செல்லும்போதும், ரகுநாதன் பின் தொடர்ந்து வந்து பாலியல் தொந்தரவு கொடுத்தார்.இந்நிலையில், எனக்கு 2021ம் ஆண்டு திருமணமானது. குழந்தைப்பேறுக்காக பெற்றோர் வீட்டிற்கு வந்தபோது, ரகுநாதன் மீண்டும் மொபைல் போனில் பேசி தொந்தரவு செய்தார்.மேலும், என் கணவரிடம் எனக்கும், அவருக்கும் உறவு உள்ளதாக, ரகுநாதன் பொய்யாக கூறியதால், என் கணவர் என்னை பிரிந்து சென்றுவிட்டார். தற்போது, என் கணவர் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு, என் கணவரையும் என்னிடமிருந்து பிரித்து, விவாகரத்து வரை கொண்டு சென்ற ரகுநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து, ராயபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, நேற்று ரகுநாதனை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.