| ADDED : ஏப் 07, 2024 12:32 AM
மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சியின் முக்கிய பஜார் வீதியாக பாவேந்தர் சாலை உள்ளது. இச்சாலை கம்பர் தெரு மற்றும் திருவள்ளுவர் சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.இச்சாலையில், 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்குள்ள கடைகளுக்கு மறைமலை நகரை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.பாவேந்தர் சாலையில், அரசியல் கட்சியினர் அடிக்கடி மேடை அமைத்து பொதுக்கூட்டம், பிரசாரம் நடத்தி வருகின்றனர்.இதன் காரணமாக, இச்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதனால், மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலைகளில் பணி முடித்து இருசக்கர வாகனங்களில் செல்வோர் மாற்று பாதையில் காத்திருந்து செல்கின்றனர்.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:மறைமலை நகரில் அரசியல் கூட்டம் நடத்த தனியாக நகராட்சி மைதானம் உள்ளது. இருப்பினும் அனைத்து அரசியல் கட்சியினரும் பாவேந்தர் சாலையில் அதிக போக்கு வரத்து நிறைந்த பகுதியில் சாலையை மறித்து பொதுக்கூட்டங்கள் நடத்துகின்றனர். பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே, இந்த சாலையில் தடுப்பு அமைத்து போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. மேலும், சாலை குறுகலாக உள்ளதால், குறைந்த அளவு மக்கள் கூட்டம் இருந்தாலும், அதிகளவில் காட்ட முடியும் என்பதால், தொடர்ந்து இங்கு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.அதேபோல, பொதுக்கூட்டம் நடைபெறும் நாட்களில், இப்பகுதியில்உள்ள கடைகளின் வியாபாரமும் பெருமளவு பாதிக்கப்படுகிறது.எனவே, மறைமலை நகரில் பொதுக்கூட்டம் நடத்தும் அரசியல் கட்சிகளுக்கு போலீசார் நகராட்சி மைதானத்தில் மட்டுமே அனுமதி தரவேண்டும். சாலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாது என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.