| ADDED : மே 20, 2024 05:37 AM
திருப்போரூர் : திருப்போரூர் ஒன்றியத்தில் கேளம்பாக்கம், செம்பாக்கம், மானாமதி, சிறுங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்தோர், இப்பகுதிகளில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில், பூண்டி உட்பட ராயமங்கலம், எடர்குன்றம் உள்ளிட்ட கிராமங்களுக்கு போதியளவு போக்குவரத்து வசதி இல்லை. இப்பகுதி வாசிகள் மருத்துவமனைக்கு செல்ல சிரமப்பட வேண்டியுள்ளது. எனவே, பூண்டி கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து கிராம வாசிகள் கூறியதாவது: பூண்டி உள்ளிட்ட கிராமங்களில், 2,000த்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். மருத்துவ தேவைகளுக்காக சிறுங்குன்றம், மானாமதி அல்லது செம்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்வதால் கடும் சிரமப்படுகின்றனர்.எனவே, பூண்டி பகுதியில் துணை சுகாதார நிலையம் அமைத்தால், சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு வசதியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.