பள்ளிகளுக்கான வாலிபால் போட்டி செயின்ட் பீட்ஸ், சேது பாஸ்கரா வெற்றி
சென்னை: சென்னையில் முதன் முறையாக பள்ளிகளுக்கு இடையிலான 'பிளேஸ்' வாலிபால் போட்டிகள், கடந்த ஒரு மாதமாக நடந்து வருகின்றன. தற்போது நடக்கும் முதல் சீசன் போட்டியில் செயின்ட் பீட்ஸ், சேது பாஸ்கரா, மான்போர்ட், ஒய்.எம்.சி.ஏ., செயின்ட் பீட்டர்ஸ், ஏ.ஜே.எஸ்., நிதி, டான் பாஸ்கோ, செயின்ட் மேரீஸ் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன.நேற்று முன்தினம் நடந்த 15வது லீக் போட்டியில், செயின்ட் பீட்ஸ் அணியினர் 25 - -20, 25 - -22, 25- - 18 என, நேர் செட் கணக்கில் மான்போர்ட் பள்ளியை வீழ்த்தினர்.இதையடுத்து 16வது லீக் போட்டியில், சேது பாஸ்கரா பள்ளியை எதிர்த்து கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ., பள்ளி அணி களமிறங்கியது.முதல் செட்டை சேதுபாஸ்கரா அணி 25 - -20 என கைப்பற்றியது. சுதாரித்த ஒய்.எம்.சி.ஏ. அணியினர் அடுத்த செட்டை 12 - -25 என வென்று பதிலடி தந்தனர். வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட் ஆட்டத்தை 25 - -18 என்ற புள்ளிக் கணக்கில் வென்று, இறுதியாக 2- - 1 என்ற செட் கணக்கில், சேது பாஸ்கரா அணி வெற்றி வாகை சூடினர்.தொடர்ந்து 17வது லீக் போட்டியில், செயின்ட் பீட்டர்ஸ் அணியினர் 25- - 17, 25 - -14, 21- - 25 என, ஏ.ஜே.எஸ்., நிதி அணியை வென்றனர். 18வது லீக் போட்டியில் டான்பாஸ்கோ அணியினர் 25 - -16, 25 - -13, 25- - 23 என, செயின்ட் மேரீஸ் அணியை வென்றனர்.