பாறைக்குன்று சிற்ப பகுதிகளில் கற்களில் நடைபாதை அமைப்பு
மாமல்லபுரம்,மாமல்லபுரம் பாறைக்குன்று சிற்ப பகுதியில், கற்களில் நடைபாதை அமைக்கப்படுகிறது.மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, பிற குடவரைகள் ஆகிய பல்லவர் கால சிற்பங்கள் உள்ளன. இந்திய, சர்வதேச பயணியரை, சிற்பங்கள் கவர்ந்து வருகின்றன. சிற்ப வளாகங்களில், பல ஆண்டுகளுக்கு முன், மண் நடைபாதையே இருந்தது.சுற்றுலா மேம்பட்டு, பயணியர் அதிகரித்த சூழலில், பயணியர் சிரமமின்றி நடக்க கருதி, பாறைக் கற்களாலான நடைபாதை, குடவரைகளுக்கு முன்பாக கல்தளம் என, படிப்படியாக அமைக்கப்படுகிறது. பிரதான சிற்பங்களில் அமைக்கப்பட்டு, பிற சிற்ப பகுதிகளில் இப்பாதை அமைக்கப்படவில்லை. குறிப்பாக பாறைக்குன்று பகுதியில் உள்ள வராக மண்டபம், ராயர் கோபுரம், மகிஷாசுரமர்த்தினி உள்ளிட்ட குடவரைகள் உள்ள பகுதிகளில், இருபுற விளிம்புகளில் கருங்கல் தடுப்பும், மையத்தில் கிராவல் மண்ணையும் நிரப்பி அமைக்கப்பட்ட பாதையில், தற்போது மண் அரித்து சீரழிந்து, பயணியர் நடக்க இயலாமல் அவதிப்பட்டனர்.இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இதையடுத்து வராக மண்டபம், ராயர் கோபுரம்உள்ளிட்ட பகுதிகளில், தற்போது நடைபாதை, நடைதளம் என அமைத்து, தொல்லியல் துறை மேம்படுத்துகிறது. இதனால், பயணியர் சிரமமின்றி நடக்கின்றனர்.