முதல்வர் கோப்பை போட்டிகள் சென்னையில் நாளை துவக்கம்
சென்னை: நடப்பாண்டுக்கான முதல்வர் கோப்பைக்கான, சென்னை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நாளை துவங்குகின்றன.இது குறித்து, சென்னை கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக முதல்வர் கோப்பைக்காக, சென்னை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நாளை துவங்கி 24ம் தேதி வரை நடக்க உள்ளன. இப்போட்டிகள் பள்ளி, கல்லுாரி, மாற்றுத்திறனாளி, அரசு ஊழியர் மற்றும் பொதுமக்கள் என, ஐந்து பிரிவுகளில் நடக்கின்றன.இதற்காக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையம் வாயிலாக முன்பதிவு முறை நடைமுறைத்தப்பட்டு, போட்டியாளர்களின் இறுதி பட்டியல் உறுதி செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு பிரிவுக்கான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர் - வீராங்கனையர், போட்டி அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நாளில், குறிப்பிட்ட மைதானத்தில் காலை 6:30 மணிக்கு வர வேண்டும்.அப்போது, இணையத்தில் பதிவு செய்த நகல், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கான உறுதி சான்று, மாற்றுத்திறனாளி அடையாள சான்று, அரசு ஊழியர்கள் அடையாள சான்று பொதுமக்களுக்கான ஆதார் மற்றும் இருப்பிட சான்று மற்றும் வங்கி சேமிப்புக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.மேலும் விபரங்களுக்கு 74017 03480 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.