உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை மாவட்டத்தில் தொடரும் மின்வெட்டு பிரச்னை மின் அழுத்த குறைபாடால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

செங்கை மாவட்டத்தில் தொடரும் மின்வெட்டு பிரச்னை மின் அழுத்த குறைபாடால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில், மின் வெட்டு மற்றும் குறைந்த மின் அழுத்த பிரச்னைகள் தலைவிரித்து ஆடுகின்றன. அதனால், அப்பகுதிவாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.செங்கல்பட்டு அடுத்த ஆத்துார், திம்மாவரம், ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில், கடந்த ஒரு வாரமாக அடிக்கடி இரவு நேரங்களில் மின் தடை ஏற்பட்டு, அப்பகுதிவாசிகள் பாதிக்கப்படுகின்றனர்.சிங்கபெருமாள் கோவில் அடுத்த செங்குன்றம் பாரதி நகர் பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் குறைந்த மின் அழுத்த பிரச்னை ஏற்பட்டு, அப்பகுதிவாசிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.இது குறித்து, கடந்த 2022ம் ஆண்டு, மறைமலை நகரில் அப்போதைய மின்வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் புகார் அளித்த போது, சிங்கபெருமாள் கோவில் மின் வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மின் பிரச்னை காரணமாக, வேலைக்கு சென்று வந்து, சரியாக ஓய்வு கூட எடுக்க முடியவில்லை.பெருந்தண்டலம் கிராமத்தில், குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் விசிறி, 'ஏசி' உள்ளிட்டவை இயங்குவதில்லை. மின் மோட்டார்கள் இயங்காததால் கிராமத்தில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டு, அப்பகுதிவாசிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மின் தடை குறித்து தகவல் தெரிவிக்கவோ, புகார் அளிக்கவோ மின் வாரிய அலுவலகத்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளும் போது, அவர்கள் தொலைபேசியை எடுத்து முறையாக பதில் அளிப்பதில்லை என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மதுராந்தகம்

மதுராந்தகம் அடுத்த காவாதுார் ஊராட்சிக்கு, சீவாடி துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதில், காவாதுார் ஊராட்சிக்குட்பட்ட வேம்பு மாரியம்மன் கோவில் தெரு, புதிய காலனி, பழைய காலனி, ஒத்தவாடை தெரு, தச்சூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில், 250க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு உள்ளது.இதில், வீட்டு மின் இணைப்புகள், விவசாய நிலங்களுக்கு செல்லும் மின் மோட்டார் இணைப்புகள் உள்ளிட்டவற்றிற்கு செல்லும் மின்சாரம், மின்னழுத்த குறைபாடு காரணமாக அடிக்கடி மின் சாதனங்கள் பழுது ஏற்படுகின்றன.தரமான மின் மாற்றி இல்லாததால், அடிக்கடி பழுது ஏற்பட்டு, மின் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.இது குறித்து அப்-பகுதிவாசி பா.அனிதா, 30,- கூறியதாவது:குறைந்த மின் அழுத்தத்தால், மின்சாதன பொருட்களான தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதன பெட்டி, மின்விசிறி, அயர்ன் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் பழுதடைந்து வருகின்றன.இரவு நேரங்களில் மின் பற்றாக்குறை, மின் தட்டுப்பாடு காரணமாக மின் சாதனங்கள் பழுது ஏற்படுவதோடு, இரவு நேரத்தில் சமையல் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் கூட செய்ய முடியவில்லை.குறைந்த மின்னழுத்தம் காரணமாக, மின்சாதன பொருட்கள் பழுதாகி பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் வீட்டுக்கு வெளியே உறங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.சீரான மின் வினியோகம் வழங்க, சம்பந்தப்பட்ட மின் வாரியத்துறையினர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.சீவாடி துணைமின் நிலையத்தின் இளநிலை பொறியாளர் கூறியதாவது:காவாதுார் பகுதியில் பழுதான மின்மாற்றி அகற்றப்பட்டு, தற்காலிகமாக வேறு மின் மாற்றியில் இருந்து, மின் வினியோகம் கொடுக்கப்பட்டுள்ளது.பழுதான மின்மாற்றியை செங்கல்பட்டு கொண்டு சென்று, பழுது நீக்கி, நாளை மறுதினத்திற்குள் காவாதுார் பகுதியில் பொருத்தி, மின் வினியோகம் சீரமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

திருப்போரூர்

மாம்பாக்கம் பகுதியில் தொடரும் மின் அழுத்த குறைபாட்டை நிவர்த்தி செய்ய வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய மாம்பாக்கம் ஊராட்சி, 2வது வார்டில், 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதிகளில், கடந்த ஒரு ஆண்டாக மின் அழுத்த குறைபாடு உள்ளது.இதனால், வீடுகளில் பயன்படுத்தப்படும் மிக்சி, கிரைண்டர், 'டிவி' உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பழுதாகின்றன. இதனால், மக்கள் அவதிப்படுகின்றனர்.எனவே, இப்பகுதியில் தொடரும் மின் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், தேவையான மின்திறன் கொண்ட புதிய மின் மாற்றி அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடுவாஞ்சேரி மின் வாரிய அலுவலகம் முற்றுகை

நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி சுற்றுவட்டார பகுதிகளிலும், அருள் நகர், ஊரப்பாக்கம், காரணைப்புதுச்சேரி, பெருமாட்டுநல்லுார், தங்கப்பாபுரம், காயரம்பேடு உள்ளிட்ட பகுதிகளிலும், அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு உள்ளது.சில நாட்களாக தொடர்ந்த மின்வெட்டால் பாதிக்கப்பட்ட பகுதிவாசிகள், இது தொடர்பாக கூடுவாஞ்சேரி மின்வாரிய உதவி செயற்பொறியாளரிடம் புகார் மனு அளித்தனர். அவ்வப்போது, தொலைபேசி வாயிலாகவும் புகார் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தொடர்ந்து மின்தடை ஏற்பட்டதை தொடர்ந்து, பெருமாட்டுநல்லுார், தங்கப்பாபுரம், காயரம்பேடு போன்ற பகுதிவாசிகள் சிரமம் அடைந்து வந்தனர்.இதனால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்டோர், கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில், நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு திரண்டனர்.அப்போது அங்கு பணியில் இருந்த மின்வாரிய ஊழியர்களிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தகவல் அறிந்ததும், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுந்தரமூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்தார்.அவர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சீரான மின் வினியோகத்திற்கு ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தார்.அதை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், நேற்று முன்தினம் நள்ளிரவில், மின்வாரிய அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை